Published : 23 Mar 2024 09:15 AM
Last Updated : 23 Mar 2024 09:15 AM

பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகிறது

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் நடந்த உயிரியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதியன்று வெளியாகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4.38 லட்சம் மாணவர்கள் எழுதினர். 7,951 பள்ளி மாணவர்கள், 1,009 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8,960 பேர் தேர்வெழுத வரவில்லை.

இதில் உயிரியல் பாடத் தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது,‘‘இந்த வினாத்தாளில் தாவரவியல் பகுதி வினாக்கள் எளிதாகஇருந்தன. ஆனால், விலங்கியல் பகுதியில் 1, 2, 3 மற்றும் 5 மதிப்பெண் என அனைத்து பிரிவுகளிலும் எதிர்பாராத வினாக்களும், பாடப் பகுதியின் உள்ளிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் இந்தாண்டு செண்டம் பெறுபவர்கள் எண்ணிக்கை குறையும்’’ என்றனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1 முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 6-ல் வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அதேபோல், கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வரை பங்கேற்காதது பெரும் சர்ச்சையானது. கரோனா பரவலால் பள்ளிக்கு முறையாக வராத மாணவர்களுக்கும் ஹால்டிக்கெட் தரப்பட்டது உட்பட சில காரணங்களால் ஆப்சென்ட்எண்ணிக்கை உயர்ந்துவிட்டதாகவும், வரும் ஆண்டுகளில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவது உறுதி செய்யப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் நடப்பாண்டு பொதுத் தேர்வு எழுத 7 லட்சத்து 72,200 பள்ளி மாணவர்கள், 21,875 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 94,075 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் சுமார் 13 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது. இது கடந்தாண்டை ஒப்பிடும் போது குறைவாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x