

இளையான்குடி: இளையான்குடி அருகே 75 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளிக்கு பட்டா கிடைத்ததால், ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக் கிராமத்தில் 75 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளி தொடங்கப்பட்டது. 6 ஏக்கரில் அமைந்துள்ள இப்பள்ளி, 1961-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 1979-ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, 30 கிராமங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். 24 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியில் பயின்று வருகின்றனர்.
மேலும், மேல்நிலைப் பள்ளிக்கு தனியாக அறிவியல் ஆய்வகம் இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் கேட்டு கல்வித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால், பள்ளிக்கு பட்டா இல்லையென கூறி, அதிகாரிகள் கூடுதல் வகுப்பறை கட்டிடத்துக்கு நிதி ஒதுக்க மறுத்து வந்தனர். இதனால் போதிய வகுப்பறைகள் இல்லாமல், மாணவர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
இது குறித்து சில மாதங்களுக்கு முன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் செய்தி வெளியானது. அதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள், பள்ளியை ஆய்வு செய்தனர். தற்போது, 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்பள்ளிக்கு பட்டா கிடைத்துள்ளது. இதையடுத்து, கிராம மக்கள், பள்ளி நிர்வாகத்தினர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், பள்ளிக்கு பட்டா இல்லாததை காரணம் காட்டி புதிய கட்டிடங்களுக்கு அனுமதி தர அதிகாரிகள் மறுத்து வந்தனர். பட்டா கேட்டு 10 ஆண்டுகளாக போராடி வந்தோம். இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானதும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் தலையிட்டு, பட்டா கிடைக்க நடவடிக்கை எடுத்தனர் என்றார்.