

கணிதத் துறையில் உலக அளவில் மிகச் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் ஏபெல் பரிசு வழங்கப்படுகிறது. இதை ‘கணிதத்துக்கான நோபல் பரிசு’ என்று குறிப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, உயிரியல், வேதியியல், இயற்பியல் போன்றவற்றுக் கெல்லாம் நோபல் பரிசு அளிக்கப்பட்டாலும் கணிதப் பிரிவுக்கென்று எந்தப்பரிசும் அறிவிக்கப்படவில்லை.
இரண்டாவது, கிட்டத்தட்ட நோபல் பரிசுத் தொகைக்கு சமமாக 849,340 அமெரிக்க டாலர் வரை ஏபெல் பரிசுத் தொகையாகும். இது நார்வே கணித மேதை நீல்ஸ் ஹென்ரிக் ஏபெல் என்பவரின் பெயரில் வழங்கப்படுகிறது. இவரது விகிதமுறா மூலங்களின் சமன்பாடு தொடர்பான கண்டுபிடிப்பு 250 ஆண்டுகளாக தீர்க்கப்படாத, முதன்மையான கணிதச் சிக்கலுக்கு தீர்வு கண்டது. ஆனால் தனது வாழ் நாளில் ஏபெல் அங்கீகாரம் எதனையும் பெறவில்லை. மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து 26 வயதிலேயே மறைந்தார்.
ஏபெல் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட நார்வேயின் மற்றொரு கணித மேதை ஸோஃபஸ் லீ பெரிதும் பாடுபட்டார். அதுவும் 1897-ல் நோபல் பரிசுகள் முதலில் அறிவிக்கப்பட்டபோது அதில் கணிதத்துக்கு இடமில்லை என்றவுடன் இது மேலும் உறுதியானது. நார்வே மன்னர் இரண்டாம் ஆஸ்கர் 1902-ல் நார்வேஜியன் அகடமி ஆஃப் சயின்ஸ் அண்ட் லெட்டர்ஸ் அமைப்புடன் இணைந்து ஏபெல் விருது உருவாகக் காரணமானார்.
இந்தப் பரிசு தொடர்பான விதிமுறைகளை கணிதவியல் வல்லுனர்கள் கார்ல் ஸ்டோர்மெர் மற்றும் லுட்விக் சைலோ ஆகியோர் வகுத்தனர். என்றாலும் அதுவரை இணைந்திருந்த ஸ்வீடனும் நார்வேயும் 1905-ல் பிரிந்துவிட, இந்த திட்டம் பின்னடைவை சந்தித்தது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின் 2001-ல் ஏபெல் பரிசை நார்வே அரசு நடைமுறைபடுத்தியது.
இந்தப் பரிசைப் பெறத் தகுதியானவர் என்று யாரை வேண்டுமானாலும் சிபாரிசு செய்யலாம். பரிந்துரைகளை சர்வதேச கணித குழுவும் ஐரோப்பிய கணித குழுவும் இணைந்து தங்கள் தேர்வுகளை நார்வேஜியன் அகடமி ஆஃப் சயின்ஸ் அண்ட் லெட்டர்ஸ் அமைப்புக்கு அனுப்ப, அது இறுதி முடிவை எடுக்கும்.
சென்னை டூ நியூயார்க்: ஏபெல் பரிசு பெற்ற முதல் பெண் அமெரிக்காவைச் சேர்ந்த கரேன் உலன்பெக். அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், லெபனான், ரஷ்யா, அர்ஜன்டினா, பெல்ஜியம், ஹங்கேரி, கனடா, இஸ்ரேல், ஸ்வீடன் ஆகிய நாட்டினர் இந்தப் பரிசை பெற்றுள்ளனர். இவர்களோடு, ஏபெல் பெற்றுள்ள ஒரே இந்தியர் ஸ்ரீனிவாச வரதன்.
அதற்கு அடுத்த ஆண்டு பத்மபூஷன் விருதினையும், 2023-ல் பத்ம விபூஷன் விருதினையும் இந்திய அரசு அவருக்கு வழங்கியது. அமெரிக்காவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான தேசிய அறிவியல் பதக்கத்தை 2010-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இவருக்கு அளித்தார்.
னிவாச வரதன் சென்னையில் பிறந்தவர். பொன்னேரி போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்து மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னை பல்கலை, கொல்கத்தா இந்திய புள்ளியியல் கழகம் போன்றவற்றில் பணியாற்றியவர். நியூயார்க் பல்கலையின் அங்கமான கூராண்ட் கணிதவியல் கழகத்தில் சேர்ந்து பின்னர் அந்தக்கழகத்தின் இயக்குனராக உயர்ந்தார். நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு இவர் செய்த பங்களிப்புக்காக இவருக்கு 2007-ல் ஏபெல் பரிசு வழங்கப்பட்டது.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்