

மு
ன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வகுப்பறைச் சூழல் அழுத்தம் நிரம்பியதாகத் தென்படுகிறது. ஆசிரியர் – மாணவர் உறவில் விரிசல் ஏற்படும்விதமான சில சம்பவங்கள் நடந்தேறுகின்றன. இவற்றுக்கு மத்தியில் தேர்வு நெருங்கும் இத்தருணத்தில் ஆசிரியரும், பெற்றோருமாக மாணவருக்குத் தரும் அழுத்தங்கள் வேறு. இத்தகைய அழுத்தங்களில் இருந்து விடுபடுவது எப்படி?
மாணவரின் பிரகாசமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இத்தகைய அழுத்தங்கள் அவர்களுக்கு அவசியம் என வாதிடும் பெற்றோர்களே இங்கு அதிகம். போட்டி மிகுந்த உலகை எதிர்கொள்ள இத்தகைய அழுத்தங்கள் உதவும் என அவர்கள் நம்புகிறார்கள். இதன் விளைவு, காலை விழித்ததிலிருந்து இரவு கண்ணயரும்வரை படிப்பு சார்ந்தும் இதர திறன்களுக்காகவும் பந்தயக் குதிரைகளாகக் குழந்தைகளை விரட்டிப் பழக்குகிறோம்.
இப்படி அவர்களின் நலனுக்காக என்று நாம் முன்வைக்கும் எல்லா முயற்சிகளும் எங்கோ ஓரிடத்தில் முதலுக்கே மோசமாய் போகும்போது செய்வதறியாமல் தவிக்கிறோம்
“ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள முழுமையை வெளிக்கொணர்வதே முழுமையான கல்வி என்றார் விவேகானந்தர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மதிப்பெண்களை நோக்கிய மாணவர்களின் ஓட்டம் இதற்கு எதிர்த்திசையில் அமைந்துபோனது. குழந்தைகளின் சக்திக்கு மீறிப் பெற்றோர்கள் அவர்களை நிர்ப்பந்திக்கும்போது எதிர்மறையான விளைவுகளே ஏற்படும்.
தங்கள் மன அழுத்தத்துக்கு வடிகாலின்றித் தவிக்கும் மாணவர்கள் தட்டுப்படும் சிறு தூண்டுதலுக்கும் வெடிப்பாக வினையாற்றிவிடுகிறார்கள். விடலைப் பருவ மாணவர்களைப் பாதிக்கும் இந்த மாற்றங்கள் ஒரு நாளில் நிகழ்வது அல்ல.
குழந்தைப் பருவம் தொட்டே அவர்கள் பார்க்கும் வன்முறை நிறைந்த பொம்மைச் சித்திரங்கள், சிறகடித்து விளையாட வாய்ப்பு தராது அடைத்துப்போடும் வீடியோ கேம்ஸ், சதா கொறிக்கும் குப்பை உணவுகள் என மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்கின்றன” என்கிறார் ஆசிரியரும் எழுத்தாளருமான பிரியசகி.
குழந்தைகள் பிடிவாதமாகவோ, மெல்லக் கற்பவர்களாகவோ இருப்பின் அதற்கான காரணத்தை அலசி அவர்களுக்கு உதவ முற்பட வேண்டும். மாறாக அவர்களைத் திட்டுவது, வதைப்பது, மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவது, கடுமையான தண்டனைகள் அளிப்பது போன்றவை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
அதிலும் தேர்வு நேரத்தில் மனஅழுத்தத்தில் குமையும் மாணவர்களைப் பெற்றோரும் குடும்பத்தினரும் பரிவாகவே அணுக வேண்டும். கல்வியின் நோக்கம் அறிவை வளர்ப்பதற்காக; தேர்வு என்பது அப்படி என்ன கற்றிருக்கிறோம் என்பதைச் சுயப் பரிசோதனை செய்வதற்காக என்பதை உணர வேண்டும்.
மதிப்பெண் மட்டுமே ஒருவரின் உண்மையான மதிப்பை உரக்கச் சொல்லாது. தேர்வுகளும் அதன் முடிவுகளும் மட்டுமே வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானித்துவிடாது.
“மன அழுத்தம் தாங்காது மாணவர்கள் தடுமாறும்போது உடனிருந்து அவர்களுடைய பாரம் குறைய உதவ வேண்டும். அவர்கள் தவறிழைத்தாலும் அந்தத் தவறுகளைக் குறிப்பிட்டுக் கண்டிக்கலாமே தவிர அவர்கள் வெறுப்படையும் அளவுக்கு விரட்டக் கூடாது. உதாரணத்துக்கு ‘நீ இப்போது செய்திருப்பது முட்டாள்தனமான காரியம்’ என்பதாகக் கண்டிக்கலாமே தவிர, ‘நீ ஒரு முட்டாள்’ என்று ஆரம்பிக்கக்கூடாது. ” என்றார் பிரியசகி.
வீட்டைவிட அதிகமான நேரத்தை பள்ளியில் குழந்தைகள் கழிப்பதால், அவர்களின் ஆளுமை முதற்கொண்டு மனஅழுத்தம் தரும் வெடிப்புகள்வரை ஆசிரியர்களும் பள்ளி சூழலுமே தீர்மானிக்க வாய்ப்பாகிறது. முன்பு போல மாணவர்களைக் கண்டிக்க முடியாததுடன், தேர்ச்சி விகித நெருக்கடிகள் எனப் பள்ளிகளும் தற்போது புற அழுத்தங்களுக்கு ஆட்படுகின்றன.
மனித மாண்புகள் புறந்தள்ளப்பட்டுத் தொழிற்சாலையில் வெளித்தள்ளப்படும் உற்பத்திப் பொருட்களாகப் பிள்ளைகளை உருவாக்கிவருகிறோம். கற்பனைக்கு எட்டாத வகையில் சில மாணவர்கள் செயல்படும்போது அதிர்ந்துபோகிறோம்.
“இப்படிப் பிரச்சினைகள் எல்லாம் புதுசாக இருக்கும்போது, இவற்றுக்கு நாம் முன்வைத்து வரும் தீர்வுகள் அரதப் பழசாக இருப்பது கவலைக்குரியது. புதுப்புது பிரச்சினைகள் முளைக்கும்போது அவற்றின் வீரியத்துக்கு ஏற்றவாறு தீர்வுகளும் புதிதாக வர வேண்டும். பள்ளிச்சூழலில் அவற்றை முன்னெடுக்கும் ஆசிரியர்களும் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற உத்வேகத்துடன் செயல்பட முன்வர வேண்டும்.
அவர்களுக்கு உதவும் வகையில் வகுப்பறை சூழலும் பாடத்திட்டமும் நவீனம் பெற வேண்டும். ஆசிரியர் மாணவர் உறவிலும் காலத்துக்கு ஏற்றவாறு தீர்வுகளைப் புதிதாக உருவாக்க வேண்டும். மாணவர்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ முடியவில்லை என்று ஆசிரியர் சமூகம் புலம்பத் தேவை இல்லை. அதற்கு ஆசிரியர்கள் தங்கள் மனத்தடைகளை கடந்து வரவேண்டும்” என்கிறார் கல்வியாளர் ச.மாடசாமி.
டெல்லி மாநில அரசாங்கம் பள்ளி மாணவர்களின் மன அழுத்தங்களுக்குத் தீர்வாக, ‘ஹேப்பினஸ் கிளாஸ்’ என்ற சிரிப்பு வகுப்புகளைத் தனியாக உருவாக்கி இருக்கிறது. இந்தப் பாடவேளையில் பாடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆசிரியரும் மாணவர்களுமாய் அமர்ந்து வாய்விட்டுச் சிரித்தால்போதும்.
“மேலைநாட்டு பள்ளிகளில் மாணவர்களின் மனப்பகிர்வுக்கு எனத் தனியாக ஒரு தினத்தைச் செயல்படுத்துவதைப் பார்த்து ஆச்சரியமுற்றேன். அன்றைய தினத்தில் ஒவ்வொரு மாணவரும் தங்கள் மனதைத் திறந்து பேசுகிறார்கள். தங்களது தடுமாற்றங்கள், சிரமங்கள், மன அழுத்தங்களை வெளியே பரிமாறுகிறார்கள்.
நாம் நமது நன்னெறி வகுப்புகளைத் தொலைத்துவிட்டு, அவற்றை மீட்கத் திணறிக் கொண்டிருக்கிறோம். பள்ளிகள்தோறும் தொடுதிரைக் கணினிகளுடன் நவீன பாடத்திட்டங்களைக் கொண்டுவருவது பற்றிப் பேசுகிறோம். ஆனால், குழந்தைகளின் மனதுக்குள் பயணிக்கும் நடைமுறையில் தேங்கிக் கிடக்கிறோம்” என்கிறார் மாடசாமி.
புற உலகிலிருந்து வகுப்பறைகள் தப்பித்துவிட முடியாது. இன்று படித்தவர்களே நவீன உருவங்களில் பகைமையைக் கொண்டாடுகிறார்கள். சாதி, மதம் எனச் சகிப்புதன்மையின்மையுடன் வெளி மாறி வரும்போது அதன் நீட்சிக்கு வகுப்பறைகளும் ஆட்படத்தான் செய்யும்.
தேவையான வழிகாட்டலை மட்டும் தந்துவிட்டு விலகி நிற்க வேண்டும். மந்தைகளில் ஒருவராக வளர வேண்டாம், நீ வித்தியாசமாக இரு என்பதை உணர்த்த வேண்டும். மாணவர்களுக்குத் தேர்வை முன்னிறுத்தி ஒற்றை அழுத்தம் தரக்கூடாது.
மனம் திறந்த உரையாடல்களும், இந்த உலகம் பெரிது என்று உணர்த்துவதும், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு அவர்களின் அழுத்தங்களைப் போக்குவதும், மனக் கதவுகளைத் திறந்துவிடுவதும் அவசியம் என்பதை வலியுறுத்துகின்றனர் மாணவ நலம் விரும்பும் கல்வியாளர்கள்.