

திருப்பூர்: அடிப்படை வசதிகள் இன்றி அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடின உடல் உழைப்பு நிறைந்த பாத்திர உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் வாழும் பகுதிதான் அனுப்பர்பாளையம். குறிப்பாக, தென் மாவட்ட மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதி. தங்கள் உடல் உழைப்பை பெரிதென நம்பி வாழும் குடும்பங்கள் ஏராளம். உழைக்கும் குடும்பங்களை சேர்ந்த பெரும்பான்மையினருக்கு நம்பிக்கை அளிக்கும் கல்வித் தலமாக இருப்பதுதான் அனுப்பர் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1400-க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். மொத்தம் 3 ஆய்வகங்கள் உட்பட 31 வகுப்பறைகள் உள்ளன.
இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் கூறும்போது, “ஒரு வகுப்புக்கு 50 முதல் 60 குழந்தைகள் வரை படிக்கின்றனர். 6, 7 மற்றும் 8-ம் வகுப்புக்கு தலா இரண்டு வகுப்பறைகளும், 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 6 வகுப்பறைகளும் உள்ளன. மொத்தம் 28 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு தமிழாசிரியர் இடம் காலியாக உள்ளது. பிற வகுப்புகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை நிரப்புவதற்கு அரசிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கின்றனர். முன்னர் பள்ளியில் 800 முதல் 900 பேர் படிக்கும் வரை, எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றினார்களோ அதே எண்ணிக்கையில் தான் தற்போதும் உள்ளனர்.
இப்பள்ளியின் கல்வித்தரம் மேலும் மேம்படும் வகையில், கூடுதலாக 10 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். 1998-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 2002-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்ந்தது. மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் இல்லை. இதனால் மாணவர்கள் பலரும் பள்ளி வளாகத்தின் ஒரு பகுதி சுவரை சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள் பலர் சிறுநீரக தொற்று உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் மாணவிகளுக்கும் போதிய கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். சிதிலமடைந்த கழிப்பிடங்களை அகற்றி, புதிதாக சீரமைத்து தர வேண்டும். அதேபோல் பெரிய மைதானத்தை கொண்ட இந்த பள்ளியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காவலர்கள் இல்லை. இதனால் பகல் நேரங்களில் மாணவ, மாணவிகளை பள்ளி நுழைவுவாயில் அருகே அமர்ந்து கவனிக்கும் நிலை ஏற்படுகிறது. குடிநீர் குழாய்களும் போதிய அளவில் பொருத்துவதுடன், பள்ளி வளாகத்தில் கூடுதல் மரங்கள் வைத்து நிழல் வசதியை உண்டாக்க வேண்டும்.
மிதிவண்டி நிறுத்தகூட சரியான இடவசதி இல்லாததால், மாணவர்கள் வெயிலில் நிறுத்துகின்றனர். இதனால் மிதிவண்டி பழுது ஏற்பட்டு அவதிக் குள்ளாகின்றனர். அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சிறுநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித் துறை கூடுதல் கவனம் எடுத்து செய்துதர வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர்கள் கூறினர்.