

மதுரை: பிசியோதெரபி கிளினிக் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்க ஏதேனும் பட்டப் படிப்பு போதும் என தாட்கோ வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு பிசியோதெரபிஸ்டுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் பிசியோதெரபி கிளினிக் அமைத்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் மானியத்துடன் கடனுதவி வழங்க விண்ணப்பிக்குமாறு திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பட இருக்கிறது. அதற்கு கல்வி தகுதி ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து இருக்க வேண்டும் என குறிப்பிட்டதோடு பிசியோதெரபி துறையில் பட்ட படிப்பு அல்லது பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு பயிற்சி அளித்து பிசியோதெரபி கிளினிக் தொடங்கி நடத்த கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், இதன்மூலம் போலி பிசியோதெரபிஸ்டுகளை ஊக்குவிப்பதை தமிழக அரசு விரும்புகிறதா என்று பிசியோதெரபிஸ்டுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்டுகள் தமிழ்நாடு கிளை தலைவர் வெ.கிருஷ்ணகுமார் கூறும்போது, “சுய வேலைவாய்ப்பு திட்டத்தை ஊக்குவிக்க இத்தகைய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. கடனுதவி மற்றும் மானியம் கோரும் விண்ணப்பதாரர்கள் தொழில் சம்பந்தமாக கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். தொழிலை பற்றி அறிந்தவராகவோ மற்றும் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் அல்லவா?!
மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட தொழிலை ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவரால் வெற்றிகரமாக நடத்தி கடனை அடைக்க முடியுமா, சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு சிகிச்சை முறைகளை சரியாக வழங்க முடியுமா? பிசியோதெரபி போன்ற மருத்துவ சிகிச்சை முறைகளை முறையான கல்வி தகுதி பெற்றவர்களால் மட்டுமே வழங்க முடியும். தொழிலாக வெற்றிகரமாக நடத்தி கடனை அடைக்க முடியும். பிசியோதெரபி பட்டதாரிகளுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அதை தவிர்த்து மற்ற பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பை வழங்குவது ஆபத்தானது. இத்தகைய முடிவை நாங்கள் வண்மையாகக் கண்டிக்கிறோம்.
தாட்கோ ஏற்கெனவே கொண்டிருந்த விதிமுறைகளில் (G.O No :113 dated 24.11.2020) இயன்முறை மருத்துவ பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்க முடியும் என்று இருக்கிறது. தற்போது மாற்றப்பட்டுள்ள விதிமுறைகள் பிசியோதெரபி துறை சார்ந்தவர்களோடு கலந்து ஆலோசித்து எடுத்திருக்க வேண்டும். தமிழக இயன்முறை மருத்துவர்கள் மத்தியில் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தாட்கோ நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட அளவில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள், தமிழ்நாடு கிளை தயாராக உள்ளது.
தொழில்முனைவோர் ஊக்குவிப்பு என்ற பெயரில் எவர் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் பிசியோதெரபி கிளினிக்குகளை தொடங்கி நடத்தலாம் என்ற முற்றிலும் முரண்பாடானது. இந்தத் திட்டத்தில் தாட்கோ நிறுவனம் உடனடியாக மாற்றங்களை அமல்படுத்தி பொது மக்களின் உடல்நல பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும்'' என்றார்.