

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (பிப்ரவரி 15) முதல் தொடங்கி நடைபெற உள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29,009 பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார்2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வுகள் இன்று (பிப்ரவரி 15) தொடங்கி ஏப்ரல் 2-ம்தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தேர்வை நாடு முழுவதும் 39 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
மாணவர்கள் தேர்வு மையத் துக்குள் காலை 10 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதற்குபிறகு வருபவர்களுக்கு தேர்வெழுத அனுமதி வழங்கப்படாது. மாணவர்கள் தங்கள் தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே செல்ல ஏதுவாக தங்களின் பயணத்தை திட்டமிட்டு கொள்வது அவசியமாகும்.
அதேபோல், தேர்வு குறித்ததவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.