Published : 06 Feb 2018 12:09 PM
Last Updated : 06 Feb 2018 12:09 PM

தொழில் தொடங்கலாம் வாங்க 51: ஆஃப்லைனும் அவசியம்!

ஜி.

எஸ்.டி வரி விதிப்பு வந்த பிறகு எங்களுடைய தொழில் படுத்துவிட்டது. கேஷில் அதிகம் புழங்கும் எங்கள் தொழிலை ஒயிட்டில் செய்வது கடினம். என்ன செய்வதென்று புரியவில்லை.

உங்கள் தொழில் எதுவென்று தெரியாததால், அதற்கான ஆலோசனை சொல்வது கடினம். அதனால், இதைப் பொதுவாக எல்லோருக்குமானதாகச் சொல்கிறேன். கணக்கில் வராமல் காலம் காலமாக கேஷில் செய்துவந்த பல வியாபாரங்கள் சிறுத்துப்போனது நிஜம். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவை சிறுதொழில்கள்தாம். பெரிய தொழிலதிபர்களுக்கு எந்த இக்கட்டையும் சமாளிக்கும் பலம் உண்டு. இந்நிலையில், சிறு தொழிலதிபர்கள் அவசியம் நிர்வாக ஆலோசனை பெறுவது நல்லது. ஒரு நல்ல ஆடிட்டர் தேவை. எல்லாத் தொழில்களும் மெல்ல மெல்ல முறைபடுத்தப்பட்டுவருகின்றன. அதனால், தற்காலிக நஷ்டத்தில் மனம் தளராமல் நல்ல ஆலோசகரைக் கொண்டு உங்கள் தொழிலை நவீனப்படுத்துவதற்கான ஆலோசனை கேளுங்கள்.

பல ஆன்லைன் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகள் சம்பாதிப்பதாகச் சொல்கின்றன. இருந்தும் நஷ்டத்தில் இயங்குவதாகவும் தெரிவிக்கின்றன. நான் ஆன்லைன் விற்பனை செய்ய நினைக்கிறேன். இதில் லாபம் உண்டா இல்லையா?

- ஜெகன் மோகன், பெங்களூரு.

இரண்டும் உண்மைதான். இது முதலீட்டாளர்கள் செய்யும் தந்திர விளையாட்டு. நிறுவனத்தின் மதிப்பை அதிகரித்து விற்று லாபம் பார்க்கும் சூது விளையாட்டு. ‘Golden Tap’ என்ற புத்தகத்தைப் படியுங்கள், விவரம் புரியும். உங்களுக்குத் தெரிய வேண்டியது ஆன்லைனில் லாபம் உள்ளதா என்பதுதானே? இருக்கு, ஆனால் இல்லை. இதுதான் பதில். எதை விற்கிறீர்கள் என்பதையும் எப்படி விற்கிறீர்கள், அதற்கான சந்தை எப்படி என்பதைப் பொறுத்துத்தான் வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படும். நவநாகரிக உடைகளுக்கான உலகச் சந்தை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்ததில் பல விஷயங்கள் கிடைத்தன. உங்கள் பொருள் எது, உங்கள் வாடிக்கையாளர் யார் என்பதை வைத்துத்தான் ஆன்லைனில் விற்க முடியுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். லெக்கிங்க்ஸும் சல்வாரும் வாங்கும் பெண்கள் கல்யாணப் பட்டுப் புடவையை ஆன்லைனில் வாங்குவார்களா - பாதி விலையில் கிடைத்தால்கூட?

புடவை வாங்குதல் என்பது பொருள் வாங்குதல் அல்ல. அது ஒரு வாழ்வனுபவம். அதை எந்த லாபத்துக்காகவும் குறைத்துக்கொள்ள மாட்டார்கள் நம் பெண்கள். ஆனால், அதே நேரம் சில நகைகளை அவர்கள் ஆன்லைனில் வாங்குகிறார்கள். இது ஒரு சிக்கலான உளவியல். முதலில் உங்கள் பொருளை வாங்கும் வாடிக்கையாளரின் முழு உளவியலைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கே தெரியும், ஆன்லைனை மட்டும் நம்பாமல் பலர் ஆஃப்லைனில் கடை திறக்கிறார்கள்.

பொத்தாம் பொதுவாய் சொல்வதென்றால், ஆன்லைன் வியாபாரத்துக்குத் தற்போது கொஞ்சம் நெருக்கடி காலம்தான். எல்லாமே இனி ஆன்லைன்தான் என்றவர்கள் ஆஃப் ஆகிவிட்டார்கள். ஆன்லைன் வர்த்தகம் தன்னைச் சீரமைத்துவருகிறது. அரசாங்கமும் மெல்லத் தன் பிடியை இறுக்கிவருகிறது. விரைவில் முறைப்படும் என்பது என் அனுமானம்!

‘தொழில் தொடங்கலாம் வாங்க!’

கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார்

டாக்டர். ஆர். கார்த்திகேயன் வாசகர்கள் தங்களுடைய தொழில் முயற்சிகள் தொடர்பான சந்தேகங்களை

இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x