Published : 07 Feb 2024 06:26 AM
Last Updated : 07 Feb 2024 06:26 AM

ஐஐடி வரலாற்றில் முதல்முறையாக விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு இளநிலை படிப்பில் இடம் ஒதுக்கீடு

சென்னை: சென்னை ஐஐடியில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கும் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி ஐஐடி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐஐடி வரலாற்றில் முதல் முறையாக விளையாட்டு பிரிவு மாணவர்களுக்காக இளநிலை படிப்புகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களின் அடிப்படையிலேயே இது கொண்டு வரப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள் என நினைத்து இதை இப்போது தொடங்கியுள்ளோம்.

பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். ஒரு பாடத்துக்கு 2 இடங்களை இப்போது ஒதுக்கியுள்ளோம். சர்வதேச அளவில் தங்கம் வென்றவருக்கு 100 புள்ளிகள், வெள்ளிக்கு 90 புள்ளிகள், வெண்கலத்துக்கு 80 புள்ளிகள், பங்கேற்றிருந்தால் 50 புள்ளிகள் என தேசிய அளவுக்கும் புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த புள்ளிகளும் மாணவர் சேர்க்கையில் கணக்கில் கொள்ளப்படும்.

2024-25-ல் கிரிக்கெட், தடகளம், பேட்மின்டன், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 13 விளையாட்டுகளில் சிறந்தவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2 அல்லது 4 ஆண்டுகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என நம்புகிறோம்.

ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் இருக்கும் மாணவருக்கு இலவசகல்வி வழங்குகிறோம். ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு தேர்வு மூலமும், மேற்சொன்ன புள்ளிகள், வெயிட்டேஜ் அடிப்படையிலும் தரவரிசை பட்டியல் வெளியிட்டு, இடங்களை நிரப்புவோம்.ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிந்ததும் மாணவர் சேர்க்கை தொடங்கும்.

ஐஐடியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் 7, 8-ம் வகுப்புகளுக்கு பிறகு விளையாட்டு மைதானத்துக்கே செல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதைமாற்றும் நோக்கில், விளையாடினாலும், விளையாட்டு பிரிவு மூலம்ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றாலே இனி ஐஐடியில் சேர முடியும்.

விளையாட்டு பிரிவில் சேரும் மாணவர்களுக்கு இங்கு என்ன மாதிரியான படிப்புகள் வழங்குவார்கள் என்ற கேள்வி எழும். அதற்காக விளையாட்டு ஆய்வு மையம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். விளையாட்டு சார்ந்த படிப்புகளையும் தொடங்க இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x