

கிருஷ்ணகிரி: சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் பழங்குடியின மாணவர்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இருளர் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறியதாவது: பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஜெகதேவி காமாட்சிபுரம், ஒப்பதவாடி காளியம்மன் கோயில், கிருஷ்ணாநகர் மற்றும் காளிக்கோயில் காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறோம். பள்ளிக்குச் செல்லும் எங்களது குழந்தைகளுக்கு அரசின் உதவித் தொகைகள் பெற சாதிச் சான்று அவசியமாகிறது. சாதிச் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்தும், இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், மேல் நிலைக் கல்வி தொடர முடியாத நிலையுள்ளது.
இது தொடர்பாக கடந்த 29-ம் தேதி ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அப்போது, சாதிச் சான்றிதழ் வழங்க வருவாய்த் துறைக்கு உத்தரவிடப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். ஆனால், இதுவரை விண்ணப்பித்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கவில்லை. மீண்டும் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மனு அளித்துள்ளோம். எங்கள் குழந்தைகளின் நலன் கருதி சாதிச் சான்று வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வீட்டுமனை பட்டா கோரி மனு: இதனிடையே, ஊத்தங்கரை வட்டம் அனுமந்தீர்த்தம் கிராம மக்கள், ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: அனுமந்தீர்த்தம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக தோப்பு புறம்போக்கு நிலத்தில் 75 குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம். எங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
இதையடுத்து, ஊத்தங்கரை வட்டாட்சியரின் முயற்சியால் நிலம் அளவீடு செய்து பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால், நிலத்தின் வகை மாற்றத்துக்கு வருவாய்த் துறையின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால், எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.