Published : 03 Feb 2024 05:25 AM
Last Updated : 03 Feb 2024 05:25 AM
சென்னை: அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் என்ற பெயரில் இயங்கும் ஆய்வகங்களுக்கு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைத் தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் (நடமாடும் அறிவியல் ஆய்வகம்) 2022 நவம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 13,210 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 710 வானவில் மன்ற கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.
தற்போது 710 வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு 2, 3-ம் பருவத்துக்கான அறிவியல், கணிதக் கருவிகள் கொள்முதல் செய்து வழங்கப்பட வேண்டும்.
இதற்கான பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதியும் மாவட்ட வாரியாக பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது. உபகரணங்களைக் கொள்முதல் செய்யும்போது அதற்கான விதிகளைப் பின்பற்ற வேண்டும். எந்தவித புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT