

உடுமலை: அடிப்படை வசதிகளுக்கே திண்டாடும் அரசுப் பள்ளிகளுக்கு மத்தியில் மரங்களும், செடிகளும் நிறைந்த பசுஞ்சோலையாக பாலப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி திகழ்ந்து வருகிறது. உடுமலை - பழநி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலப்பம்பட்டி கிராமத்தில்ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. 1960-ல் கட்டப்பட்ட இப்பள்ளியில் தற்போது 60 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பழமையான 2 ஓட்டு கட்டிடங்களுடன் கூடிய 3 கட்டிடங்களில் 5 வகுப்பறைகள் உள்ளன.
இப்பள்ளியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் அதன் பரந்து விரிந்த விழுதுகளுடன் கம்பீரமாக வரவேற்கிறது. பள்ளியின் நுழைவு வாயிலில் தொடங்கும் நடைபாதையும், அதன் இருபுறமும் அமைந்த பசுமையான புல் தரையும் அதனுடன் இணைந்த மலர்ச் செடிகளும் கண்களுக்கு விருந்தாய் அமைகின்றன.
பள்ளிச் சுவருக்கு பாதிப்பை தரும் என பலரும் அச்சப்பட்ட நேரத்தில் தானாக முளைத்த அரச மரங்கள் ஆக்சிஜன் தரும் கிரியாஊக்கிகளாக தளைத்தோங்கி நிற்கின்றன. அடர்ந்து காணப்படும் மூங்கில் மரங்கள் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கின்றன.
சாலை விரிவாக்கத்துக்காகஆயிரக்கணக்கான மரங்கள் அகற்றப்பட்டஅதே சாலையில் பள்ளி வளாகத்தில் ஆலமரம், அரச மரங்கள், மூங்கில், தேக்கு, பனை மரங்கள், வேம்பு, மலை வேம்பு, செஞ்சந்தனம் உள்ளிட்ட மரவகைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி கொய்யா, நாவல், பாதாம், சீதா, சப்போட்டா, பப்பாளி , பலா என பல வகையான பழ வகை மரங்களும், குலை குலையாய் தொங்கும் தார்களுடன் கூடிய வாழை மரங்களும் அங்கு பயிலும் மாணவர்களுக்கு உண்ண கனி கொடுத்து உதவுகின்றன.
தூய்மையான கழிவறைகள், குடிநீர் வசதி, மின் விசிறிகள், தூய்மையான வகுப்பறைகள், சுத்தம், சுகாதாரம் என பசுமை பள்ளியாக திகழ்கிறது. இதுமட்டுமின்றி சமூக ஆர்வலர்கள் உதவியால் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கில புலமையில் மாணவர்கள் தனித்திறமையோடு இருப்பதை காணமுடிகிறது. இப்பள்ளியின் இந்தநிலைக்கு அர்ப்பணிப்பு உணர்வோடுபணியாற்றிவரும் பள்ளி தலைமையாசிரியை வள்ளிமயில் தான் என்கின்றனர் பெற்றோர்.
அவரிடம் பேசியபோது, ‘‘இப்பள்ளியில் பொறுப்பேற்றது முதல் பள்ளி வளாகத்தை மாணவர்கள் விரும்பும் இடமாக மாற்றவேண்டும் என முடிவெடுத்து செயல்பட்டேன். அதன் விளைவாகவே பள்ளியின் தோற்றமும், கற்கும் ஆற்றலும் மாறியுள்ளது.
எனது இந்த பணிக்கு கல்வி துறை அதிகாரிகள் அளிக்கும் ஊக்கமும், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களின் ஒத்துழைப்புமே காரணம். பழமையான கட்டிடங்கள் இன்றும் வர்ணம் பூசி தொடர்ந்து பராமரிப்பில் உள்ளன. அந்த கட்டிடங்கள் நூற்றாண்டுகள் கடந்தும் கம்பீரமாக இருக்கும். இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் தனித்திறன்களுடன் விளங்கிவருகின்றனர்’’ என்றார்.