

சென்னை: தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளி தலைமையாசிரியர்கள் ஜன.30 முதல் பிப்.11-க்குள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தொடர்ந்து மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பிளஸ் 2 வகுப்புக்கு பிப்.6 முதல் 13-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப்.13 முதல் 16-ம் தேதி வரையும் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண் பட்டியலை, பாடவாரியாக பிரித்து, தனித்தனி கட்டுகளாக கட்டி, மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். மாணவர்களின் மதிப்பெண் விடுபடாதவாறு கூடுதல் கவனத்துடன் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.