

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் தண்ணீர் பிரச்சினை காரணமாக வெளியே கட்டணம் செலுத்தி மாணவர்கள் குளித்து செல்வதாக புகார் எழுந்துள்ளது.
கோவை அவிநாசி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. நூற்றாண்டு புகழ் பெற்ற இக்கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகள் மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மாணவ, மாணவிகளின் விடுதிகளில் தண்ணீர் விநியோகம், பராமரிப்பு உள்ளிட்டவை பொதுப்பணித் துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. கல்லூரி வளாகத்தில் ‘ஏ’ பிளாக்கில் முதலாமாண்டு மாணவர்கள் தங்கியுள்ளனர். மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் அமைந்துள்ள கழிவறை பராமரிப்பு குறைபாடு காரணமாக தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் தண்ணீர் பிரச்சினை உள்ளதாக கூறி வெளியில் மேன்சன்களில் கட்டணம் செலுத்தி குளித்து செல்கின்றனர். ‘பி’ பிளாக் பாத்ரூமில் இருந்து ‘ஏ’ பிளாக் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ள கேட் வால்வு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி ரூ.200 வரை கட்டணம் செலுத்தி இயற்கை உபாதை கழித்து, குளித்து விட்டு செல்ல தனியார் மேன்சன் வளாகத்தை பயன்படுத்துவதாக மாணவர்கள் தெரிவித்தனர்” என்றார்.
இது குறித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலாவிடம் கேட்டபோது, “எப்போதாவது தண்ணீர் பிரச்சினை ஏற்படுவது வழக்கம். அது போன்ற சூழ்நிலைகளில் நிர்வாகம் சார்பில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து தரப்படும். முதலாமாண்டு மாணவர்கள் தனியார் மேன்சனில் கட்டணம் செலுத்தி குளித்து செல்வது குறித்து இதுவரை எனக்கு புகார் வரவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேரடியாக என்னிடம் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.