உயர்கல்வி நிறுவனங்களில் பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் கட்டாயம்: யுஜிசி உத்தரவு

உயர்கல்வி நிறுவனங்களில் பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் கட்டாயம்: யுஜிசி உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பிபிஏ, பிசிஏ படிப்புகளை பயிற்றுவிக்க கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்துவிதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தொழில்நுட்பக் கல்வி மற்றும் அதுதொடர்பான படிப்புகளை ஏஐசிடிஇ வரையறை செய்வதுடன் கண்காணித்து வருகிறது. தொழில்நுட்ப கல்வி என்பது பொறியியல், தொழில்நுட்பம், நகர திட்டமிடல், கட்டிடக்கலை, மேலாண்மை, மருந்தகம், பயன்பாட்டு கலை மற்றும் கைவினைப் பொருட்கள் சார்ந்த படிப்புகளாகும்.

அதன்படி எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுநிலை படிப்புகளை ஒழுங்குப்படுத்தி, அதற்கு அங்கீகாரம் வழங்கும் பணிகளை ஏஐசிடிஇ தற்போது மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வரும் கல்வியாண்டு (2024-25) முதல் பிபிஏ, பிஎம்எஸ் மற்றும் பிசிஏ படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களையும் முறைப்படுத்துவதற்கு ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.

ஒரே மாதிரியான கல்வித் தரத்தை முதுநிலை, இளநிலை படிப்புகளில் பராமரிக்கும் நோக்கத்தில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்ததகவலை மாநிலபல்கலைக்கழகங்கள் தங்களின்கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு யுசிஜி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிபிஏ, பிசிஏ படிப்புக்கான அனுமதி கோரி கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கல்வி நிறுவனங்கள் https://www.aicte-india.org/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in