

சென்னை: நம் நாட்டிலேயே முதல்முறையாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயிற்றுவிப்பதற்காக ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் இணைந்து ‘டீல்ஸ்’ எனும் திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்காக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தொழில்நுட்பக் கல்வி கற்றலுக்கு துணை நிற்றல் திட்டத்தின் (Technology Education and Learning Support - TEALS) கீழ் 14 அரசுப் பள்ளிகளில் முன்னோட்டமாக நவீன கற்பித்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கடந்தாண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, அந்த திட்டத்தை 100 பள்ளிகளில் விரிவுபடுத்துவதற்கான தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “அரசுப் பள்ளிகள் வளர்ச்சிக்காக காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பல தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ஏற்ப மாணவர்களை மேம்படுத்த வேண்டியது அவசியம். அதேபோல், பள்ளிகளில் கல்விக்கு வழங்கப்படுவதுபோல் விளையாட்டு, உடற்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, “தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் அவை ஆசிரியர்களுக்கு ஈடாகாது. அனைவருக்கும் கல்வி அறிவை தருவது எங்கள் கடமை. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. விளையாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியராவது இருப்பதை உறுதி செய்துள்ளோம்” என்றார்.
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், அரசு மாதிரிப் பள்ளிகள் திட்டத்தின் உறுப்பினர் செயலர் இரா.சுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின், மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி செசில் சுந்தர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இது சிறந்த முன்னெடுப்பாகும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 2 முதல் 3.5 கோடி வேலைவாய்ப்புகள் இருக்கும். அதை நேரடியாக மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதால் வரும்காலத்தில் வேலைவாய்ப்புகளில் நம் மாணவர்கள் முன்னணியில் இருப்பர். இதனால் முதலீடுகளும், தொழில்வளர்ச்சியும் பெருகும்” என்று தெரிவித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் கூறும்போது, “செயற்கை நுண்ணறிவு படிப்பை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். நமது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கால அட்டவணையில், ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டதற்கு தமிழக அரசின் நிதிச்சுமைதான் காரணம்” என்றார்.