அரசு பள்ளி மாணவிகளுக்கு நுண்கலைப் பயிற்சி - கலைக்கூடமானது கதிர்காமம் பெண்கள் பள்ளி

பொங்கலையொட்டி நடந்த சிறப்பு கலைப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள்.
பொங்கலையொட்டி நடந்த சிறப்பு கலைப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள்.
Updated on
1 min read

புதுச்சேரி: பொங்கலையொட்டி, புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த நுண்கலை சிறப்பு பயிற்சியில் ஏர்கலப்பை, வாழ்த்து அட்டைகளை உருவாக்கி மாணவிகள் அசத்தினர். வாழ்த்து அட்டைகளை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், ஆசிரியர்களுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கலையொட்டி மாணவிகளுக்கு சிறப்பு கைவினைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில், விவசாயிகள் பயன்படுத்தும் ஏர்கலப்பை உருவாக்குவது, வாழ்த்து அட்டைகளை உருவாக்குவது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி முதல்வர் மோகன் பிரசாத் இந்தப் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

தென்னை மரக்குச்சி,தேங்காய் குருமி, குருத்து இலை, பாக்கு மட்டை, பனைமர பொருட்கள் ஆகியவற்றை கொண்டு நுண்கலைப் பொருட்களை மாணவிகள் உருவாக்கினர்.

50-க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். நுண்கலை ஆசிரியர் உமாபதி இவர்களுக்கான பயிற்சியினை அளித்தார். ஏர் கலப்பையுடன் விவசாயி நடந்து செல்வது, அவர் கையில் உணவுப்பையை எடுத்துச் செல்வது,நெல் அறுவடை செய்வது, பயிர்கள் செழித்து வளர்வது என கலை உருவங்களை இந்தப் பயிற்சியின் போது மாணவிகள் உருவாக்கியிருந்தனர். அவர்கள் உருவாக்கிய கைவினைப் பொருட்கள் பள்ளி வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த கலைப் பயிற்சியின் ஒரு பகுதியாக பொங்கல் வாழ்த்து அட்டைகளையும் மாணவிகள் உருவாக்கினர். இந்த வாழ்த்து அட்டையில் பொங்கல் பானை, கோலம், மாடுகளை குளிப்பாட்டுதல், ஜல்லிக்கட்டு காளை,கரும்பு போன்றவற்றை வரைந்துள்ளனர்.

இந்த வாழ்த்து அட்டைகளை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் தங்களது நண்பர்களுக்கும் அனுப்ப இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.

“நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம். பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நெருங்கும் நேரத்தில் வேளாண் பணியின் சிறப்பை எடுத்துச் சொல்லும் வகையில் எங்கள் பள்ளி மாணவிகளுக்கு இந்த நுண்கலைப் பயிற்சியை அளித்திருக்கிறோம்” என்று கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in