

சென்னை: உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுமம் ( யுஜிசி ) வலியுறுத்தியுள்ளது. இதனை பின் பற்ற தவறும் கல்வி நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக யுஜிசியின் செயலர் மணீஸ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங் கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான விதிமுறைகளை யுஜிசி கடந்த 2009-ல் உருவாக்கியது. இவற்றை பின்பற்றி, கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க போதுமான வழிமுறைகளை எடுக்க தவறும் கல்வி நிறுவனங்கள் மீது யுஜிசி சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படி, கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு, ராகிங் எதிப்பு அணி, ராகிங் தடுப்பு பிரிவு, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள், ராகிங் தடுப்பு தொடர்பான பயிலரங்கம் மற்றும் கருத்தரங்குகள், எச்சரிக்கை மணி போன்றவற்றை கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வப்போது மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி சிக்கல்களை கண்டறிந்து தீர்வுகாண வேண்டும்.
இது தவிர மாணவர்கள் தங்கும் விடுதிகள், உணவுக் கூடங்கள், ஓய்வறைகள், கழிப்பறைகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். சேர்க்கை மையம், துறை அலுவலகம், நூலகம், உணவகம், விடுதி என அனைத்து முக்கிய இடங்களிலும் ராகிங் தடுப்பு சுவரொட்டிகளை ஒட்டியிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ராகிங் எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் வழிகாட்டுதல்படி, ஜூனியர், சீனியர்களுக்கு இடையே நல் உறவை ஏற்படுத்த வேண்டும்.
வாக்கு மூலம் பெற வேண்டும்: அதே போல ராகிங் தடுப்பு தொடர்பாக யுஜிசி உருவாக்கியுள்ள தலா 30 நொடிகள் ஓடும் 5 டிவி விளம்பரங்களையும் கல்லூரிகளில் ஒளிபரப்ப வேண்டும். ராகிங் தடுப்பு தொடர்பான வழிமுறைகளை பெற்றோரும், மாணவர்களும் www.antiragging.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்வதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ராகிங் எதிர்ப்பு தொடர்பான மாணவர்களின் வாக்கு மூலங்களையும் ஆன்லைன் வாயிலாக பெற வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.