

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் அசூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தலைமையாசிரியர், 6 ஆசிரியர்கள், 110 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு கடந்த 2003-ம் ஆண்டில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது. மேலும், அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி சுகாதார வளாகமும் கட்டப்பட்டன. இந்தநிலையில், இந்த சுகாதார வளாகமும், 7-ம் வகுப்புக்கான கட்டிடமும் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. இதனால், அங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, பழைய கட்டிடங்கள், கடந்த செப்டம்பர் மாதம் இடிக்கப்பட்டன.
இதனால் மாணவர்கள் இயற்கை உபாதைக்கு பள்ளியின் எதிரிலுள்ள பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், 7-ம் வகுப்புக்கு வகுப்பறை கட்டிடம் இல்லாததால், பள்ளியின் அருகில் உள்ள கோயில் மண்டபத்தில், அந்த வகுப்பு மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து பயின்று வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், மழைக் காலத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக மாணவர்களுக்கு தற்காலிக சுகாதார வளாகம் அமைத்துக் கொடுக்க வேண்டும், அதேபோல, 7-ம் வகுப்புக்கான கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ராம.நிரஞ்சன் கூறியது: இப்பள்ளி மாணவர்கள், இயற்கை உபாதைக்கு பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்துவதால், அவர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இதேபோல, 7-ம் வகுப்பு இயங்கி வந்த கட்டிடம் இடிக்கப்பட்டு 3 மாதங்களாகியும், இதுவரை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன. இதனால், அந்த வகுப்பு மாணவர்கள், அருகிலுள்ள கோயில் மண்டபத்தில் படிப்பதால், உரிய வசதிகள் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், தற்போது இயங்கும் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை மற்றும் போர்டிகோ இடிந்து ஆங்காங்கே சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன.
இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இதேபோல, இந்தப் பள்ளிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய 3 கணினிகள் பழுதடைந்துள்ளதால், காட்சிப் பொருளாக ஒரு வகுப்பறையின் மூலையில் முடங்கிக் கிடக்கின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அசூர் நடுநிலைப் பள்ளிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ் கூறியது: அசூர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான சுகாதார வளாகம் கட்டுவதற்கு ரூ.6 லட்சமும், 2 வகுப்பறைகள் கட்ட ரூ.33 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.