

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே அரசுப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் மாலை நேரங்களில் அங்கு வரும் மதுப்பிரியர்கள் அரசுப்பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக பயன்படுத்த தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட விஷமங்கலம் ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் பல சீர்கேடுகள் பள்ளி வளாகத்தில் நிகழ்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் பொம்மி குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் என்பவர் கூறும்போது, ‘‘ திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி களில் விஷமங்கலம் ஊராட்சி பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. கழிப்பறை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இப்பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால் காலையில் பள்ளியாக செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரவில் மதுக்கூடமாக மாறிவிடுகிறது.
இப்பகுதியைச் சேர்ந்த பலர் மதுபாட்டிலுடன் மாலை 6 மணிக்கு மேல் பள்ளி வளாகத்தில் கூட்டம், கூட்டமாக வந்து அமர்ந்து இங்கேயே மது அருந்திவிட்டு, காலி மதுபாட்டில்களையும், உணவு பொட்டலங்களையும், காலி வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் கப், சிகரெட் பாக்கெட்டுகள், போதை தரும் பொருட்களின் காலி பாக்கெட்டுகள் உள்ளிட்ட கழிவுகளை பள்ளி வளாகத்திலேயே வீசிவிட்டு செல்கின்றனர். அடுத்த நாள் காலை பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் இதை கண்டு செய்வதறியாமலும் யாரிடம் சொல்லி இதை தடுப்பது என தெரியாமலும் தவிக்கின்றனர். இங்கு வரும் மதுப்பிரியர்கள் மாலை நேரம் மட்டுமின்றி பள்ளி விடுமுறை நாட்களில் பகலிலும் வந்து வகுப்பறைகளுக்கு முன்பாக அமர்ந்து மது அருந்துகின்றனர்.
பள்ளி வளாகம் முழுவதும் மதுபாட்டில்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. உணவு கழிவுகளை சாப்பிடதெரு நாய்களும், பன்றிகளும் பள்ளிக்குள் படையெடுகின்றன. இது மட்டுமா? விஷப்பூச்சிகளும், பாம்புகளும் கூட இங்கு படையெடுக்கின்றன. பள்ளிக்கு பாடம் கற்க வரும் சின்னஞ்சிறிய மழலைகள் காலி மதுபாட்டில் களையும், உணவு கழிவுகளையும் கண்டு சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி நிர்வாகம் சார்பில் கந்திலி காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும், அதிகாரிகள் பாராமுகமாக இருப்பது மதுப்பிரியர்களுக்கு வசதியாக அமைந்துள்ளது. மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும் இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்படுவது வேதனையிலும், வேதனை அளிக்கிறது.
ஆகவே, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பள்ளி வளாகத்தை சுற்றிலும் உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும். பள்ளிக்கூடத்தை திறந்தவெளி பாராக மாற்றும் மதுப்பிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்வி கற்கும் இடம் என்பது புனிதமானது என்பது யாரும் சொல்லிக்கொடுத்து தெரிந்துகொள்வதில்லையே. அனைவரும் சிறுவயது முதல் அறிந்ததே. இதை எப்படி இன்றைய தலைமுறையினர் அலட்சியப்படுத்தி இப்படியெல்லாம் சமூக அக்கறை இல்லாமல் உள்ளனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது’’ என்றார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இது குறித்து ஆய்வு நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.