

திருப்பூர்: திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கியதை கண்டித்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற அரசு்பள்ளி ஆசிரியர்கள், கையில் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் பேசும்போது, ‘‘திருப்பூர் விஜயாபுரம் அரசுப் பள்ளியில் கடந்த வாரம் பாடம் நடத்தும்போது, வகுப்பறையில் விளையாடிக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவரை ஆசிரியை கண்டித்துள்ளார். இதற்கு பதிலடியாக, அந்த ஆசிரியையை மாணவர் தாக்கியுள்ளார். இதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் அரசுப் பள்ளி ஆசிரியரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நடந்துவரும் இதுபோன்ற சம்பவங்களால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால்,ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புவழங்குவதுடன், ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர். இந்தஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து மனு அளித்தனர்.