

விழுப்புரம்: மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட தாழங்காடு பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக் கட்டிடம் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பே முற்றிலும் சிதலமடைந்து விட்டது. இப்பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று இங்குள்ள மக்கள் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் முதல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் பலமுறை முறையிட்டு, இது தொடர்பான மனுக்களை அளித்துள்ளனர். ஆனாலும், புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
இதற்கிடையே பள்ளியின் மேற்கூரை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, தற்போது பாலித்தீன் தார்பாயால் மூடப்பட்டு இயங்கி வருகிறது. மழைக்கால அசாதாரண நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்று கிராம மக்கள் அஞ்சு கின்றனர். “இந்த பள்ளிக் கட்டிடம் குறித்து மனுக்கள் அளித்துள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலமுறை இப்பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
ஒவ்வொரு முறை ஆய்வின் போதும், ‘உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி விட்டு செல்வார்கள். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காது” என்று தாழாங்காடு கிராம மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் பள்ளிக் கட்டிடம் மேலும் மோசமாகியுள்ளது. இதற்கு மத்தியில் மாணவர்கள் இக்கட்டிடத்தில் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளிக் கட்டிடம் மோசமாக உள்ள சூழலில், இந்தப் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பவே பெற்றோர் அஞ்சுகின்றனர். தற்போது இங்கு 40 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலித்தீன் தார்பாய் மேற்கூரை, பலத்த காற்று வீசினால் பறந்து விடக்கூடும் என்ற நிலையிலேயே உள்ளது. தற்போது மரக்காணம் பகுதியில புயல் மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ‘புயல் மழை வந்தால் இந்த தார்பாய் கூரை தாக்கு பிடிக்க வேண்டுமே!’ என்று இங்குள்ள ஆசிரியர்களும் சொற்ப எண்ணிக்கையில் உள்ள மாணவர்களின் பெற்றோரும் அச்சத்தில் உள்ளனர்.