Published : 26 Nov 2023 04:18 AM
Last Updated : 26 Nov 2023 04:18 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ”முதல் தலைமுறை பட்டதாரி” சான்று வழங்க கெடுபிடி!

விருத்தாசலம்: முறையாக பட்டப்படிப்பு முடித்து விட்டு, அரசு வழங்கும், ‘முதல் தலைமுறை பட்டதாரி’ சான்று கோரி விண்ணப்பித்தால் வருவாய் துறையினர் தங்களை அலைக்கழிப்பதாக திட்டக்குடியைச் சேர்ந்த அதற்கான தகுதியுடைய ஒரு வாசகர் ஒருவர் நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ பகுதியில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வருவாய்த்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது பெறப்பட்ட தகவல்கள்: ‘முதல் தலைமுறை பட்டதாரி’ சான்றிதழ் வழங்குவது தொடர்பான புதிய இணைய தொகுப்பு உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள விரிவான வழி காட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, ஒரு குடும்பத்தில் முதலில் பட்டப் படிப்பை முடிப்பவருக்கு ‘முதல் தலைமுறை பட்டதாரி’ சான்றிதழ் வழங்கி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கும் பட்சத்தில் அக்குடும்பத்தில் முதலில் பட்டப் படிப்பு முடித்தவருக்கு மட்டும் ‘முதல் தலைமுறை பட்டதாரி’ சான்றிதழ் வழங்கவும், ‘முதல் தலைமுறை பட்டதாரி’ சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபர் முறையான கல்வித்திட்டத்தில் 10-ம்வகுப்பு, பிளஸ்டூ முடித்து பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சான்று பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?: மனுதாரர், தங்களுக்கான ஆவணங்களுடன் பொது இ-சேவை மையத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் கள விசாரணக்குட்படுத்தப்பட்டு, தகுந்த காரணங்களுடன் ஏற்கவோ, திருப்பியனுப்பவோ, நிராகரிக்கவோ உரிமை உண்டு. ஏற்கப்பட்ட விண்ணப்பத்தை மண்டல துணை வட்டாட்சியருக்கு ஒரு வார காலத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

வருவாய் ஆய்வாளரின் அறிக்கை கிடைக்கப் பெற்ற ஒரு வார காலத்துக்குள் மண்டல துணை வட்டாட்சியர் சான்று வழங்கிட வேண்டும். இதையடுத்து மனுதாரர் ‘முதல் தலைமுறை பட்டதாரி’ சான்றுக்கான குறுஞ்செய்தி அவர்களது செல்பேசியில் வரப் பெற்றவுடன் இணைய வழியில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து ‘முதல் தலைமுறை பட்டதாரி’ சான்றிதழ் பெறப்பட்டது தெரிய வந்தால் அது ரத்து செய்யப்படும்.

இந்தச் சான்று பெற விண்ணப்பதாரரின் புகைப்படம், முகவரி சான்று, மனுதாரரின் மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை, மனுதாரர் மற்றும் பெற்றோரின் உறுதிமொழி படிவம், பெற்றோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை மனுதாரரின் கல்விச் சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும். தொலைதூர கல்வி மற்றும் திறந்தவெளி கல்வி பயின்று முதல் தலைமுறை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம்வகுப்பு, பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரட்டையர்கள் உள்ள பட்டதாரி இல்லாத குடும்பத்தில், முதல் பட்டதாரி சலுகை கோரும் இரட்டையர்கள் இருவருக்கும் வழங்கலாம். ‘முதல் தலைமுறை பட்டதாரி’ சான்றிதழ் பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வரையறை கிடையாது. எந்த ஆண்டு பட்டப்படிப்பு முடித்திருந்தாலும், ‘முதல் தலைமுறை பட்டதாரி ஆக இருக்கும் பட்சத்தில் அவர் விரும்பும் நேரத்தில் சான்றிதழ் பெற தகுதியுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில், ஒரு குடும்பத்தில் முதலில் பட்டப்படிப்பு படிக்கும் ஒருவர், படிக்கும் போதே விண்ணப்பித்து இதற்கான சான்றிதழை வாங்க வேண்டும்; படித்து முடித்த பின் வாங்க முடியாது என்று வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர்.

‘படிக்கும் போது வாங்க வேண்டும் எனில், பட்டப்படிப்பை முழுவதுமாக முடிக்காத நிலையில் அவருக்கு எப்படி பட்டதாரி சான்று வழங்குவீர்கள்?’ என்று கேட்டதற்கு வருவாய்த் துறையினரிடம் பதில் இல்லை. “எங்களுக்கான உத்தரவு இதுதான்; படித்துக் கொண்டிருக்கும் போதே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தான்” என்று கறாராக பதில் அளிக்கின்றனர்.

இந்த நடப்பு நெருக்கடிகள் தெரியாமல், பட்டம் பெற்று, சற்றே தாமதமாக ‘முதல் தலைமுறை பட்டதாரி’ சான்று பெற இளையோர் விண்ணப்பிக்கப்படும் போது அலைக்கழிக்கப் படுகின்றனர். “எங்களுக்குத் தேவையான நேரத்தில், அதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கிறோம். இது எப்படி தவறாகும்? பிற வருவாய் சான்றுகளைப் போலவே இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலே குறிப்பிட்டுள்ள கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி வாசகருக்குத்தான் இந்தச் சிக்கல் என்றில்லை. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக இந்தச் சிக்கல் இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் , மாவட்ட வருவாய் அலுவலர்கள் இவ்விஷயத்தில் தலையிட்டு முறையான ஆவணங்கள் இருப்பின் பட்டம் பெற்ற நிலையில் உள்ளவர்களுக்கு இந்த சான்றிதழை வழங்க அறிவுறுத்த வேண்டும் என்பது இதில் பாதிக்கப்படும் பலரின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x