தஞ்சாவூர் அண்ணாநகரில் சகதிக்காடான அரசுப் பள்ளி - மாணவர்கள் கடும் அவதி

தஞ்சாவூர் அண்ணாநகர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளதால் அவதியுறும் மாணவர்கள். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர் அண்ணாநகர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சேறும் சகதியுமாக உள்ளதால் அவதியுறும் மாணவர்கள். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
Updated on
2 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அண்ணாநகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், மழைநீர் வெளியேற வடிகால் வசதியில்லாததால், பள்ளி வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தஞ்சாவூர் அண்ணாநகரில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 326 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாமல் இருந்ததால், மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது அங்கு கழிப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இந்தப் பணி கடந்த பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல, இங்குள்ள சத்துணவுக் கூட கட்டிடமும் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, இந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டும், இன்னும் பணிகள் தொடங்கப்படாமலேயே உள்ளன. மேலும், இப்பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீர் வெளியேற வசதி இல்லாததால், சிறு மழைக்கே சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சகதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

வழுக்கி விழுந்து விடாமல் இருக்க ஒருவரையொருவர் பிடித்தபடி<br />நடந்து செல்லும் மாணவிகள்.
வழுக்கி விழுந்து விடாமல் இருக்க ஒருவரையொருவர் பிடித்தபடி
நடந்து செல்லும் மாணவிகள்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் மாணவ, மாணவிகள் கடும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்கு நடந்து செல்லும் வழியில் மட்டுமாவது தற்காலிகமாக கிராவல் மண் கொட்டி பாதையை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், இதற்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள சத்துணவு மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பள்ளியில் கழிப்பறை கட்டும் பணிகளை விரைவுபடுத்தவும், மழைநீர் தேங்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in