

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் கீழப்பறட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தார்பாய்படுதாவால் வேயப்பட்ட ஷெட்டில் இயங்கி வருகிறது. இதனால், இங்கும் பயிலும் மாணவர்கள், ஆசிரியைகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கீழப்பறட்டையில் 1972-ம் ஆண்டு செப்.23-ம் தேதி முதல் கான்கிரீட் கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வந்தது. பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளானதால், அந்த கட்டிடம் கடும் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, அந்தக் கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த மே மாதம் பள்ளிக் கட்டிடம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது.
ஆனால் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால், ஜூன் மாதம் பள்ளி தொடங்கியதில் இருந்து தொடக்கப் பள்ளியின் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தார்பாய்படுதாவால் மேற்கூரை வேயப்பட்ட ஷெட்டில் பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளியில் தற்போது 46 மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து பயிலும் நிலையில், ஒரு தலைமையாசிரியை, ஒரு ஆசிரியை பணியாற்று கின்றனர். எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும், பணியாற்றும் ஆசிரியைகளும் நாள் தோறும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கீழப்பறட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறியது: இங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடம் கடந்த மே மாதம் இடிக்கப்பட்டது. இதனால், ஜுனிலிருந்து, இந்தப் பள்ளிக்கு எதிரே தனியாருக்குச் சொந்தமான ஷெட்டில் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு கடும் சிரமத்துடன் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றர். தற்போது மழை பெய்து வருவதால், மழைச் சாரல் பள்ளிக்குள் விழுகிறது. இதனால், புத்தகங்கள், நோட்டுகள் நனைகின்றன. மாணவர்கள் அமருவதற்கு இருக்கை அல்லது தரை விரிப்பு இல்லாததால், சிமென்ட் தரையில் அமர்ந்து பயின்று வருகின்றனர்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுக் கூடம் மற்றும் சுகாதார வளாகம், சென்னை செல்லும் பிரதான சாலையின் எதிரில் உள்ளது. இதனால், ஆசிரியைகள், மாணவர்கள் இயற்கை உபாதையை கழிக்க ஆபத்து நிறைந்த சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும், பள்ளி அருகில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால், காலையில் பள்ளியை அச்சத்துடன் திறக்கும் நிலை உள்ளது.
இந்தப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு, பல்வேறு காரணங்களால் கடந்த 6 மாதங்களாக நிதி ஒதுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிதி ஒதுக்கி, கீழப்பறட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடத்தை விரைந்து கட்டித் தரவேண்டும். அதுவரை அந்தப் பள்ளியைப் பாதுகாப்பான கட்டித்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த ராஜ் கூறியது: புதிய வகுப்பறை கட்டுவதற்கு மனித நேய பள்ளிக் குழந்தைகள் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி கோரப்பட்டது, ஆனால் அவர்கள் நிதி வழங்குவதற்கு கால தாமதமானது. இந்தப் பள்ளியின் நிலையறிந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். எனவே, பள்ளி கட்டிடப் பணி விரைவில் தொடங்கப்பட்டு, அடுத்த 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.