

வரலாற்றுத் தொன்மையை ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கு அடிப்படைத் தரவுகளாக இருப்பவை தொல்லியல் எச்சங்களே. அத்தகைய தொல்லியல் கல்வியை இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கற்பிக்கின்றன. குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் முதுகலை, இளங்கலை, பட்டயப் படிப்புகளில் பண்டைய வரலாறு, தொல்லியல், கலாச்சாரம், தொல்லியல், அருங்காட்சியகவியல், பாதுகாப்புத் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளை வழங்குகின்றன.
குறிப்பாக டெக்கான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 1939 முதல் பண்டைய இந்திய வரலாறு, தொல்லியல் பாடப்பிரிவுகளில் முதுகலை தொடங்கி முனைவர் பட்டம் வரை வழங்கிவருகிறது. மேலும், கணிணி வழியில் ஆய்வுகள், தொல்லியல் பொருட்களை வேதியியல் பகுப்பாய்வு செய்வது, புதைபடிவ ஆய்வியல், தொல்லுயிரியல் ஆய்வுகள், மகரந்தவியல் ஆய்வுகள் எனத் தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய ஆய்வகங்களுடன் மிகச் சிறந்த தொல்லியல் ஆய்வுக் கல்வியை வழங்குகிறது. புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களான சங்காலியா, வசந்த் சிண்டே, சாந்தி பப்பூ போன்ற ஆய்வாளர்களை நாட்டுக்கு வழங்கியது டெக்கான் பல்கலைக்கழகம்.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொல்லியல் துறைக்கு அடித்தளமிட்டவர் 1911இல் துணைவேந்தராக இருந்த அசுதோஷ் முகர்ஜி. இங்கு கற்கால வரலாறு, கல்வெட்டு, நாணயவியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை எனத் தொல்லியலோடு தொடர்புடைய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் 1961 முதல் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் படிப்பை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட நிலையில் வழங்கிவருகிறது.
கற்கால வரலாறு, தொல்லியல் அகழாய்வு நெறிமுறைகள், கட்டிட, சிற்பக்கலை, கல்வெட்டுக்கள் பற்றிய பாடப்பிரிவு, நாணயவியல், அருங்காட்சியகவியல், ஆழ்கடல் ஆய்வுகள் தொடர்பான பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் முறையான அகழாய்வுப் பயிற்சி வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைத் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், ஆழ்கடல் ஆய்வுத்துறை, கட்டிடக்கலைத் துறை எனத் தொல்லியல் சார்ந்த அனைத்துப் பாடப்பிரிவுகளையும் வழங்குகிறது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஓராண்டு தொல்லியல், கல்வெட்டியல் பட்டயப் படிப்பையும், பண்டைய வரலாறு, தொல்லியல் பாடத்தில் முனைவர் பட்டத்தையும், ஆறு மாத தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த சான்றிதழ் படிப்பையும் வழங்குகிறது.
சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஓராண்டு கவ்வெட்டியல் பாடத்தை வழங்குகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இரண்டு வருட தொல்லியல் படிப்பை உதவித் தொகையுடன் வழங்குகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை அவர்கள் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.
பல்கலைக்கழகங்கள் தவிர்த்துப் பல கல்லூரிகள் தொல்லியல் பாடத்தை இளங்கலை, முதுகலை அளவிலும் வழங்குகின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள பூம்புகார் கல்லூரி ஓராண்டு கட்டிடக்கலை, சிற்பக்கலை பாடப்பிரிவில் இந்தியாவில் இருந்த பல்வேறு கட்டிடக்கலை அமைப்புகளை விளக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாமல்லபுரத்தில் உள்ள கட்டிட, சிற்பக்கலை கல்லூரியும் மாணவர்களுக்கு இளங்கலையில் நுண்கலைப் பட்டத்தை வழங்குகிறது. சென்னையில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி இளநிலைக் கல்வியில் தொல்லியல் பாடத்தை வழங்குகிறது.
இக்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட வரலாற்றின் மறுபக்கத்தை தொல்லியல் கல்வியின் மூலம் அறிவியல்பூர்வமான முறையில் அகழ்ந்தெடுத்து உலகுக்குப் பறைசாற்றுகின்றன. தொல்லியல் என்பது அனைத்துத் துறைகளையும் இணைத்துச் செய்யப்பட வேண்டிய ஆய்வுத் தளமாகும்.
ஆகையால் பல்துறை அறிஞர்களும் ஆர்வத்தோடு தொல்லியலைக் கற்றால் உலகின் தொன்மை வாய்ந்தவர்கள் இந்தியர்கள் என்பது புலப்படும். குறிப்பாக உலகின் தொன்மையாள மொழிக்கும், வரலாற்றுக்கும் சொந்தக்காரர்களான தமிழர்கள் தங்கள் வரலாற்றின் வளமையை உணரவும் போற்றவும் மிகப்பெரும் வாய்ப்பாக அமையும்.
- இ. இனியன் | தொடர்புக்க்கு initnou@gmail.com