Published : 18 Nov 2023 03:49 AM
Last Updated : 18 Nov 2023 03:49 AM

அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவத்தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்வு: நடப்பு செமஸ்டருக்கு உயர்த்தப்படாது என அமைச்சர் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவத்தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 440 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் – டிசம்பர் மாதத்திலும், ஏப்ரல் – மே மாதத்திலும் பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், அண்ணாபல்கலைக்கழக பருவத் தேர்வுக்கான கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து பொறியியல் கல்லுாரி முதல்வர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தின் 266-வது சிண்டிகேட் குழு கூட்டம் மற்றும் நிதிக்குழு ஒப்புதலுடன் பருவத்தேர்வு கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இளநிலை பருவத் தேர்வு மற்றும் செயல்முறை தேர்வுக்கான கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.150-ல் இருந்து ரூ.225 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இளநிலை பட்டப்படிப்பு ஆய்வறிக்கை கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் முதுநிலை பருவத் தேர்வு, செயல்முறைத் தேர்வு, செயல்முறைப் பயிற்சி, கோடைகால ப்ராஜெக்ட் கட்டணம் ரூ.450-ல்இருந்து ரூ.650 ஆகவும், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், பட்டப் படிப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கான கட்டணம் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு ரூ.1000-ல் இருந்து, ரூ.1,500 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், பட்டப்படிப்பு சான்றிதழ்கள் ஆகியவை டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்ய ரூ.1,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பருவத்தேர்வு கட்டணம் தாள்ஒன்றுக்கு ரூ.75 முதல் ரூ.200 வரை அதிகரித்திருப்பது மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும் கூடுதலாக ரூ.1,000 வரை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். எனவே, தேர்வுக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமைச்சர் விளக்கம்: இந்நிலையில், செமஸ்டர் கட்டணம் தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று கூறியதாவது: பல்கலைக்கழங்களில் தேர்வுக்கட்டணம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் கூட்டத்தில் முடிவெடுத்தோம். இந்தச் சூழலில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பாடப் பிரிவுக்கு ரூ.150-ல் இருந்து, ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நடப்பு செமஸ்டருக்கு தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படாது. மாணவர்கள் வழக்கமான கட்டணத்தை செலுத்தினாலே போதும். அடுத்த கல்வி ஆண்டில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வரவேற்கக்தக்கது. உயர்கல்வி துறை விதிகளின்படியே அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், தங்களின் தற்போதைய தகுதிக்கேற்ப பணிக்கு விண்ணப்பித்தால், தேர்வுசெய்வது குறித்து அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x