Last Updated : 16 Jan, 2018 11:47 AM

 

Published : 16 Jan 2018 11:47 AM
Last Updated : 16 Jan 2018 11:47 AM

இஸ்ரோ 100 நாட் அவுட்!

சதம் என்றாலே எப்போதும் விசேஷம்தான். விளையாட்டில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் சதத்தைத் தொடும் நிகழ்வு மிகவும் இனிமையான தருணமாகவே இருக்கும். அந்த வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) நூறாவது செயற்கைக்கோளை ஏவி, வரலாற்றில் முக்கியமான மைல் கல்லைத் தொட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு தொடக்கமே இஸ்ரோவுக்கு அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.

பி.எஸ்.எல்.வி. - சி40 ராக்கெட் மூலம் கார்டோசாட் - 2சீரிஸ் உள்பட 31 செயற்கைக்கோள்களை, இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியிருக்கிறது. இது பி.எஸ்.எல்.வி. வரிசையில் 42-வது ராக்கெட். 'கார்டோசாட்' வரிசையில் ஏழாவது செயற்கைக்கோள். இப்போது அனுப்பிய செயற்கைக்கோள்களில் ஒரு நானோ, ஒரு மைக்ரோ என மூன்று செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கு சொந்தமானவை. மற்றவை கனடா, பின்லாந்து, பிரான்ஸ், தென்கொரியா, பிரிட்டன், அமெரிக்காவைச் சேர்ந்தவை. 1999-ல் முதன்முதலாக வெளிநாட்டு செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பியது. இதுவரை 28 நாடுகளின் செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. இந்தத் தருணத்தில் இஸ்ரோவின் காலப் பயணத்தைத் திரும்பிப் பார்ப்போம்.

மாட்டு வண்டியில் ஏவுகணை

இந்தியாவில் 1960-களில் இருந்தே விண்வெளி ஆய்வுகள் முன்னெடுக்கப்படத் தொடங்கிவிட்டன. முதலில் தளம் அமைப்பதற்கான பணிகள்தான் இந்தியாவில் தொடங்கப்பட்டன. அப்படி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் இடம் தும்பா. கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பழமையான புனித மேரி மக்தலேன் தேவாலயத்தில்தான் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளராத அந்தக் காலகட்டத்தில் பரிசோதனைக்காக 1963-ம் ஆண்டு நவம்பர் 21 தேதி ‘சவுண்டிங் ராக்கெட்’ ஏவப்பட்டது.

அது புகையைக் கக்கியபடி சென்றதை வெறும் கண்ணால் பார்த்து, அது சென்ற போக்கை விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர். இதனைத்தொடர்ந்து 1965 ஜனவரி 1-ம் தேதி விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையம் தும்பாவில் விரிவுபடுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ராக்கெட்டுக்கு வேண்டிய தளவாடங்களையும் ஏவ உதவும் கருவிகளையும் மாட்டு வண்டியிலும் சைக்கிளிலும் கொண்டு செல்லும் நிலை இருந்தது. தொடக்கநிலை என்பதால், வெளிநாடுகளின் உதவியுடன் இந்திய விஞ்ஞானிகள் செயல்பட்டனர்.

முத்திரைப் பதித்த தருணம்

1969-ம் ஆண்டு சுதந்திர தினம் விண்வெளித் துறையில் மறக்க முடியாத நாள். அன்றுதான் இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இஸ்ரோ செயல்படத் தொடங்கியது. அதன் முதல் தலைவராக டாக்டர் விக்ரம் சாராபாய் இருந்தார். அடுத்த ஆறு ஆண்டுகளில் செயற்கைக்கோள் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்தது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று இந்தியா தனது முதலாவது பரிசோதனை செயற்கைக்கோளான ஆரியபட்டாவை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது.

இந்த செயற்கைக்கோளை அனுப்ப ரஷ்யா உதவியது. ரஷ்யாவின் ராக்கெட்டுடன் இது செலுத்தப்பட்டது. முதல் பரிசோதனை செயற்கைக்கோள் அனுப்பும்போது இஸ்ரோ பெங்களூருவுக்கு மாற்றப்பட்டிருந்தது. அப்போதும்கூட இஸ்ரோவில் பெரிய அளவில் வசதிகள் இல்லாமல்தான் செயல்பட்டது.

ஆரியபட்டாவைத் தொடர்ந்து பரிசோதனை செயற்கைக்கோளாக பாஸ்கராவை 1979-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி இஸ்ரோ அனுப்பியது. இந்த ராக்கெட்டும் ரஷ்ய உதவியுடன்தான் ஏவப்பட்டது. இஸ்ரோ வெளிநாடுகளின் உதவியின்றி அனுப்பிய முதல் செயற்கைக்கோள் ரோகிணி. 1980-ம் ஆண்டு இது அனுப்பப்பட்டது. இதன்பின் இஸ்ரோவின் சாதனைப் பயணம் எல்லாமே ராக்கெட் வேகம்தான். சர்வதேச அளவில் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய இடத்தைப் பிடித்த இஸ்ரோ, ராக்கெட், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தையும் அடைந்தது. பல முக்கியமான செயற்கைக்கோள்களை அனுப்பி முத்திரையும் பதித்தது இஸ்ரோ.

விண்வெளித் துறையின் வல்லரசு!

பூமியைப் பற்றிய ஆய்வு, இயற்கை வள ஆதாரங்களின் பயன்பாடு, நீர்வள ஆதார வளர்ச்சி. தகவல் தொடர்புக்கென இஸ்ரோ பல செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது. அது மட்டுமல்ல, நாட்டில் உள்ள கிராமப்புற மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் விண்வெளி சார்ந்த தொலைத்தொடர்பு கல்வி, தொலை மருத்துவ வசதித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் இஸ்ரோ முக்கிய பங்கை ஆற்றியிருக்கிறது. சீராக ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் ஏவிய இஸ்ரோ, 2000-ம் ஆண்டுக்கு பிறகு இன்னும் பல மடங்கு வேகமடைந்தது.

ஒரு காலத்தில் வெளிநாட்டின் உதவியோடு செயல்பட்ட இஸ்ரோ, இன்று வல்லரசு நாடுகளின் செயற்கைக்கோள்களை அனுப்பும் அளவுக்கு மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. வருங்காலத்தில் இந்தியா விண்வெளித் துறையின் வல்லரசாக இருக்கும் காலமும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

முதல் செயற்கைக்கோளும் சந்திரனில் சந்திரயானும்

2005-ல் கார்டோசாட் முதல் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. இதன்மூலம் வரைபடம், கடல்வழி போக்குவரத்து கண்காணிப்பு, நீர்வள மேம்பாடு, நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புக்கு உதவும்.

2008, அக்டோபர் 22-ம் தேதி இஸ்ரோ வரலாற்றில் மறக்க முடியாத நாள். நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக அன்றுதான் சந்திரயான் -1ஐ இஸ்ரோ அனுப்பியது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை சந்திரயான் கண்டுபிடித்ததை நாசா உறுதிப்படுத்தியது.

அசத்திய மங்கள்யான்!

செவ்வாய் கோள் ஆய்வை அமெரிக்காவின் நாசா போன்ற விண்வெளி ஆய்வு மையங்கள் மட்டுமே செய்துவந்த வேளையில், இந்தியாவுக்கு அது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால், இதிலும் இஸ்ரோ முத்திரைப் பதித்தது. 2013-ம் ஆண்டு நவம்பர் 5 அன்று மங்கள்யானை இஸ்ரோ விண்ணில் ஏவியது. மங்கள்யான், 2017 ஜூன் 21-ம் தேதியுடன் 1,000 நாட்களை நிறைவு செய்து பெரும் சாதனையும் படைத்தது.

பாகுபலி இஸ்ரோ

என்னதான் இஸ்ரோ மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியிருந்தாலும், அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை அனுப்ப மற்ற நாடுகளின் உதவியைத்தான் இஸ்ரோ எதிர்பார்த்திருந்தது. அந்த வரலாற்றையும் 2017-ல் இஸ்ரோ மாற்றி எழுதியது. கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி சொந்தமாக கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிக்க முடியும் என்று உலக நாடுகளுக்கு இஸ்ரோ உரக்க சொன்ன நாள் அது. அன்றுதான் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-ஐ இஸ்ரோ ஏவியது. இதன்மூலம் 4,000 ஆயிரம் கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் சக்தியைப் பெற்றது இஸ்ரோ.

2017, பிப்ரவரி 16 அன்று பி.எஸ்.எல்.வி. சி 37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. ஒரே நேரத்தில் இத்தனை செயற்கைக்கோள்களை அனுப்பிய இஸ்ரோவைப் பார்த்து வல்லரசு நாடுகள் மூக்கில் விரல் வைத்தன. இதற்கு முன்பு 2014-ல் ரஷ்யா 37 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x