

நாட்றாம்பள்ளி: திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாட்றாம்பள்ளி பகுதிக்கு போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை போன்ற பகுதிகளுக்கு உள்ளூர் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்துடன் திருப்பத்தூர் இருந்தபோது குறைவான பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட்டு வந்தன. தற்போது, திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் பழையபடியே குறைந்த அளவுக்கே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்ட பிறகு அரசு அலுவலகங்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், தொழிலாளர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது குடியேறி வருகின்றனர். அவர்கள், தினசரி அலுவலகம் சென்று வரவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வர வசதியாக கூடுதல் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளது.
குறிப்பாக, வெளியூர்களை காட்டிலும் உள்ளூர் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் பேருந்து வசதிகள் மிக,மிக குறைவாக உள்ளதாக பொதுவான குற்றச்சாட்டுள்ளது. அதிலும், திருப்பத்தூரில் இருந்து நாட்றாம்பள்ளி பகுதிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருப்பதால் நாட்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட தலைநகர் பகுதிக்கு வந்து செல்ல மிகவும் சிரமப்படுவதாகவும், அவசர தேவைக்கு பேருந்து கிடைக்காமல் பேருந்து நிறுத்தங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து நாட்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து, சி.கே.ஆசிரமம், புதுப்பேட்டை, வெலக்கல்நத்தம், நாட்றாம்பள்ளி, தொட்டிகிணறு வரை அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, தொட்டிகிணறு பகுதிக்கு தினசரி காலை 8.30 மணிக்கு நகரப்பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பேருந்து மூலமாக தான் திருப்பத்தூர் அடுத்த அக்ரகாரம் அரசுப் பள்ளி, புதுப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
காலை 8.30 மணிக்கு இயக்கப்படும் இந்த பேருந்தை பிடித்தால் தான் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியும் என்பதாலும், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மொத்த மாணவர்களும் ஆபத்தை உணராமல் அரசுப் பேருந்திலேயே படியில் தொங்கியபடியும், பேருந்தின் மேற்கூரை மீது அமர்ந்தபடியும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். மேலும், நாட்றாம்பள்ளி, அக்ரகாரம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் இந்த பேருந்தை நம்பித்தான் உள்ளனர்.
மாற்று பேருந்து வசதி இல்லாததால் நகரப் பேருந்தில் (டி-18) அளவுக்கு அதிகமான கூட்டம் தினசரி நிரம்பி வழிகின்றன. 50 பேர் மட்டுமே செல்லக்கூடிய பேருந்தில், 120 பேர் பயணிக்கும் நிலை நீண்ட நாட்களாக தொடர்கிறது. மாணவர்கள், இளைஞர் களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை உள்ளதால் திருப்பத்தூரில் இருந்து தொட்டிகிணறு பகுதிக்கும், நாட்றாம்பள்ளியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்து கழக அலுவலர்களிடம் கேட்டபோது, "திருப்பத்தூரில் இருந்து தொட்டிகிணறு பகுதிக்கு தினசரி காலை 8.30 மணிக்கும், அதற்கு அடுத்து காலை 11 மணிக்கும், அதன்பிறகும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி நாட்றாம்பள்ளிக்கு வேறு சில பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் கட்டணமில்லா பயணத்தை மேற்கொள்வதால் அரசுப் பேருந்தில் கூட்டம் அதிகமாக காணப் படுகிறது. மற்ற நேரங்களில் டி-18 அரசுப் பேருந்து பயணிகள் இல்லாமல் காலியாகவே இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர்களின் வசதிக்காக காலை நேரத்தில் மாற்று பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுக்க ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.