

சென்னை: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை இன்று (நவம்பர் 16) வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2023-24) பொதுத் தேர்வுகள் பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 18-ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 19-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 8-ம் தேதியும் தொடங்கி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறையின் வருடாந்திர நாட்காட்டியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுத் தேர்வுகளை அதற்கு முன்பாக நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. இதனால் பொதுத் தேர்வுக்கான முழு கால அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் நிலவியது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல், உயர் கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதை ஓரிரு நாட்களில் வெளியிட இருப்பதாகவும் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படியே 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தேர்வுத் துறை சார்பில் இன்று (நவம்பர் 16) வெளியிடப்பட உள்ளது. இதை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து வெளியிடுகிறார் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.