

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சாமுண்டாவின் பிறந்தநாளையொட்டி பழங்குடியினர் பெருமை தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை உயர்கல்வி நிறுவனங்களில் நடத்த பல்கலைக்கழக மானியக்குழுமம் (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசியின் செயலர் மணீஸ் ஆர்.ஜோஷி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நவ.15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடைமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காக போராடிய முதல் வீரர் பிர்சா முண்டா. அவரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலும், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையிலும் நவ.15-ம் தேதி ‘பழங்குடியினர் பெருமை தினமாக’ ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் கடந்த 2021-ல் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நடப்பாண்டு, அரசியலமைப்பு தினத்துடன் சேர்த்து வரும் நவ.15 முதல் நவ.26-ம் தேதி வரை நாடு முழுவதும் 3-வது பழங்குடியின பெருமை தினத்தை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வி நிறுவனங்களும் தங்களது கல்லூரிகளில் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் சுதந்திர இயக்கங்களுக்கும், பழங்குடியின சமூகங்களுக்கும், இந்திய பாரம்பரியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பை வெளிக்கொணரும் வகையிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இது பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.