

கோவில்பட்டி: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு குமாரபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர்.
தலா 11 மாணவ, மாணவிகள் என 22 பேர் படித்து வருகின்றனர். இங்குள்ள கட்டிடம் பழமையாகி விட்ட தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டப் பட்டு கடந்த 2005-ம் ஆண்டு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் 2 வகுப்பறைகள், ஒரு தலைமை ஆசிரியர் அறை ஆகியவை உள்ளன. இந்த கட்டிடம் அருகே சமையலறையும் உள்ளது. மேலும், இந்த பள்ளி வளாகத்தில் பழைய வகுப்பறை, சமையலறை கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் விடிய விடியகோவில்பட்டி பகுதியில் மழைபெய்தது. இதில், பள்ளியின் இடது பக்க சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
சுற்றுச்சுவர் முழுவதையும் இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அரசிடம் அனுமதி கிடைத்தவுடன் புதிதாக சுற்றுச்சுவர் கட்டப்படும் எனவும் தெரிவித்தனர். இதற்கிடையே, பள்ளி சுற்றுச்சுவர் இடிந்த தகவல் அறிந்தவடக்கு குமாரபுரத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என தெரிவித்தனர்.
அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தெற்கு குமாரபுரத்தில் பள்ளி உள்ளது. ஆனால், அந்தகிராமத்தை சேர்ந்த ஒருமாணவர் மட்டுமே அப்பள்ளியில் படிக்கிறார். மீதமுள்ள21 மாணவர்கள் வடக்கு குமாரபுரத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பள்ளியை வடக்கு குமாரபுரத்துக்கு மாற்ற வேண்டும் என பெற்றோர் கூறினர்.
உடனடியாக பள்ளியை வேறொரு இடத்துக்கு மாற்ற இயலாது. இது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பி அனுமதி கேட்ட பின்னர் தான் மாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.