Last Updated : 07 Nov, 2023 12:24 PM

2  

Published : 07 Nov 2023 12:24 PM
Last Updated : 07 Nov 2023 12:24 PM

தாய் - தந்தையரில் ஒருவரை இழந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தடுமாற்றம் ஏன்?

உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க வந்த குமராட்சியைச் சேர்ந்த மாணவி, அவரது தந்தை.

விருத்தாசலம்: தமிழ்நாடு அரசு கடந்த 2012-ம் ஆண்டு, முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களில் தாய், தந்தை இருவரில் ஒருவரை இழந்து வாடும் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தியது.

அந்த உதவித் தொகை மாணவர்களுக்கு 3 ஆண்டு கள் மட்டுமே வழங்கப்படும். இத்தொகையை பெற ஒற்றை பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் அவசியம். இது தவிர ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், ஒரு பெற்றொரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் பள்ளியில் இருந்து நன்னடத்தைச் சான்றிதழ் உள்ளிட்டவை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும் பெரும்பாலான மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு தகவல் பகிரப்பட்ட நிலையில், பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவரின் குடும்பத்தினர் பள்ளிகளுக்குச் சென்று விசாரித்த போது, அது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விசாரித்து பாருங்கள் எனத் தெரிவித்துள்ளனர். அங்கு சென்றபோதும், அவர்களும் ஆட்சியர் அலுவலகம் சென்று விசாரித்து பாருங்கள் என்ற பதிலையே அளிக்க, பெற்றோர் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆர்.அரவிந்தன் கூறுகையில், “ஒருங் கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மாதம் ரூ.2ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022 செப்டம்பர் முதல் 4 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து அறிந்த சிலர் மனு அளிப்பர்.

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்தன்.

அந்த மனு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கள ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். அதனடிப் படையில் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மாவட்டத்தில் 40 பேருக்கு மட்டுமே வழங்கப்படக் கூடிய நிலை உள்ளது. தற்போது 2500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இந்தத் தொகை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே. உதவித் தொகை பெறும் மாணவர்களின் வருகைப் பதிவு கண்காணிக்கப்படும்.

வருகைப் பதிவு சரிவர இல்லையெ னில் உதவித் தொகை ரத்து செய்யப்படும். கடலூர் போன்ற பெரிய மாவட்டங்களுக்கு பயனாளிகள் எண்ணிக்கை 40 என்பது குறைவு தான் என்ற போதிலும், அந்த எண்ணிக்கையை உயர்த்தவும் தற்போது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஆன்லைன்விண்ணப்ப வசதி ஏற்படுத்தப்படவில்லை. தற்போது மாணவர்களி டையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் விண்ணப்ப படிவமும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

எனவே ஒற்றை பெற்றொரைக் கொண்ட மாணவர்கள், இனி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு அலுவலர்களை அணுகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயன்பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x