

அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச்.புதுப்பட்டியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் மாணவியர் விடுதி உள்ளது. இதில் 56 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விடுதி மாணவிகள் நேற்று முன்தினம் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்நிலையில், தமிழ்நாடு ஆதி திராவிடர் நல ஆணைய இயக்குநர் மருத்துவர் ரவி வர்மன் நேற்று மாலை அரசு மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
வருகை பதிவேடு, பொருட்கள் இருப்பு, குடிநீர் விநியோகம், உணவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். விடுதி காப்பாளர் சித்ரா மற்றும் சமையலர், மாணவிகளிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டார். ஆய்வின் போது அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜ சேகர், வட்டாட்சியர்கள் வள்ளி, மில்லர் மற்றும் போலீஸார், அலுவலர்கள் உடனிருந்தனர்.