Published : 01 Nov 2023 04:47 PM
Last Updated : 01 Nov 2023 04:47 PM
சென்னை: மற்றவர்களை மகிழ்வித்து தாங்களும் மகிழக்கூடிய இரண்டு நாள் விழாவுக்கு சென்னை ஐஐடி ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர் உறவுகளுக்கான அமைப்பின் சார்பில், மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக சவேரா என்ற சமூக விழிப்புணர்வு விழா வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இக்கல்வி நிறுவன வளாகத்திலும், சென்னையின் இதர பகுதிகளிலும் மாணவர்களைக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பின்தங்கிய குடும்பங்களுக்கு சென்னை ஐஐடி மாணவர்கள் நன்கொடை வழங்கும் நன்கொடை இயக்கமும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
இது தனிநபர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள், கனவுகள், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஓரிடத்தை உருவாக்குவதற்கான கூட்டுத் தேடலாகும். சவேராவின் ஒவ்வொரு அம்சமும் பெருமகிழ்ச்சிக்கான காரணத்தை குறிப்பிட்ட நோக்கத்துடன் நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களால் இந்த நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் கீழ்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
4 நவம்பர் 2023:
• மகிழ்ச்சி ஓட்டம் : வளாகத்திற்குள் மகிழ்ச்சிக்காக ஒரு ஓட்டம்.
• நன்கொடை இயக்கம்: பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் நன்கொடை வழங்குவார்கள்
• வேடிக்கையூட்டல்: வேடிக்கையூட்டும் நிகழ்ச்சியுடன் நிதி திரட்டல்
• ஜாம் அமர்வு: கதைசொல்லல், கவிதை, திறந்த மைக் அமர்வுகள், குழுவாக விரும்பிச் செய்தல் (group jamming).
5 நவம்பர் 2023:
• ஹேப்பி ஸ்ட்ரீட் : ஜும்பா, யோகா, இசை போன்றவற்றால் தெரு முழுவதும் மகிழ்ச்சி நிரம்பிய நிகழ்வுகள்.
• சிஎஸ்ஆர் எக்ஸ்போ: நிறுவனங்கள் மன ஆரோக்கியத்தில் தங்களது சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துரைக்கும்
• கண்காட்சி: பல்வேறு தன்னார்வ நிறுவனங்களின் அரங்குகள், உணவு, பொருட்கள் விற்பனைக் கடைகள்.
• பயிற்சிப் பட்டறைகள்: உள்ளூர் கலை வடிவங்கள், கலை தெரபி வரை பயிற்சிப் பட்டறைகள்.
• 'நம்ம சவேரா' : சென்னை மாணவர்கள் வழங்கும் இசை, நடனம் மற்றும் தெருநாடகம்
• தொண்டு நிகழ்ச்சி - பிரபலமான நபரைக் கொண்டு நிதி திரட்டல்
• டிஜே நைட்- நடன இரவு நிகழ்ச்சி
சவேரா விழாவின் பின்னணியில் உள்ள சிந்தனை வெளிப்பாடு குறித்து விவரித்த சென்னை ஐஐடி-ன் சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர் உறவுகளுக்கான ஆசிரிய ஆலோசகர் பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், "தொழில்நுட்பக் கண்டுப்பிடிப்புகளுடன் எங்களது மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியமும் நல்வாழ்வும் முதன்மையானவை. சவேரா மூலம் இக்கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அனைவரும் நாம் வாழும் உலகைப் பாராட்ட வேண்டும். அதனால் அவர்கள் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய உந்துதல் பெறுவார்கள்" எனக் குறிப்பிட்டார். மாணவர்கள் தங்களது அறைகளை விட்டு வெளியே வரவும், சக மாணவர்களுடன் விளையாடவும், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதைப் பகிர்ந்து கொள்ளவும், சமூகத்தை மகிழ்விக்க ஒரு சிறிய நடவடிக்கை எடுக்கவும் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT