Published : 01 Nov 2023 03:04 AM
Last Updated : 01 Nov 2023 03:04 AM

நல்லறிவை வழங்கும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும்: மாணவர்களுக்கு நடிகர் தாமு அறிவுரை

புதுப்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான தேர்வை கொண்டாடுவோம் என்ற பயிலரங்கத்தில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த திரைப்பட நடிகர் தாமு.

திருவண்ணாமலை: மாணவர்களின் மூளையில் உள்ள அசுத்தங்களை அகற்றி நல்லறிவை வழங்கும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என திரைப்பட நடிகர் தாமு அறிவுரை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான “தேர்வை கொண்டாடுவோம்” என்ற பயிலரங்கம் புதுப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரேணு (காட்டுக்காநல்லூர்), சிவக்குமார் (வல்லம்), மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பத்மஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோவர்த்தனன் வரவேற்றார். கண்ணமங்கலம் பேரூராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், காவல் ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் சரஸ்வதி படத்துக்கு மாலை அணிவித்து, குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாமு பேசும்போது, “மாதா, பிதா, குரு, தெய்வம் என பெரியோர்கள் கூறியபடி தாய், தந்தையருக்கு முதலில் மரியாதை அளிக்க வேண்டும். உங்கள் மூளையில் உள்ள அசுத்த எண்ணங்களை அகற்றி நல்லறிவை வழங்கும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு சில மாணவர்கள் அடிமையாக உள்ளனர். தலைமுடியை வெட்டுடா என்ற ஆசிரியரை பார்த்து, உங்கள் தலையை வெட்டுவேன் என மாணவர் கூறுகிறார். இப்படிப்பட்ட மாணவர்கள் திருந்த வேண்டும்.

தேர்வு காலம் நெருங்கி வருவதால், நவம்பர் முதல் ஏப்ரல் வரை நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்ணமங்கலம் அரசுப் பள்ளிகள் முதலிடம் பிடிக்க மாணவர்களை வாழ்த்துகிறேன்” என்றார். பின்னர் மெஸ்மரிசம் முறையில், பெற்றோர் செய்யும் தியாகங்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றை மாணவ-மாணவிகளிடம் எடுத்துரைத்தார். இதைக் கேட்ட பல மாணவ -மாணவிகள் அழுதனர். மேலும் அவர், பொதுத் தேர்வில் மனஅழுத்தத்தை போக்கி மனவலிமையுடன் தேர்வுகள் எழுத மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் குமார், உதவி ஆய்வாளர் கார்த்திக், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் பாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x