நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!

நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!
Updated on
2 min read

மிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பல நீர்நிலைகள் நோய்வாய்ப்பட்டுவிட்டன. எஞ்சிய நீர்நிலைகளும் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. சாய ஆலைகளின் கழிவால் கடைசி நாடித்துடிப்புடன், சாவின் விளிம்பில் இருக்கும் திருப்பூர் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வகையில், களம் இறங்கியுள்ளனர் திருப்பூர் பெம் பள்ளி மாணவர்கள். குஜராத்தில் டிசம்பர் 27 அன்று தொடங்கிய தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக, ‘நொய்யல் ஆற்றின் தற்போதைய நிலையை’ கள ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பித்து இருக்கிறார்கள் தியா சபீர், பிரகல்யா, ஸ்ரீ கோவிந்த் ஆகிய ஏழாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மகாதிரிபுரசுந்தரி, சம்வேத்யா ஆகிய எட்டாம் வகுப்பு மாணவிகள். மூன்று மாதங்களாக நொய்யல் வழித்தடத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ. பயணித்து இந்த ஆய்வை சமர்பித்துள்ளதாகக் கூறுகிறார் இவர்களது பள்ளியின் பயிற்சி ஆசிரியை சமீமா பேகம்.

சாமளாபுரம் குளம், நொய்யலாறு திருப்பூரில் நுழையும் பகுதியான அக்ராஹப்புத்தூர், மங்கலம், ஆண்டிப்பாளையம் குளம், கருவம்பாளையம் தடுப்பணை, மாமரத்துப்பள்ளம், ஒரத்துப்பாளையம் அணை, சின்னமுத்தூர் தடுப்பணை, ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் முதற்கொண்டு, நொய்யல் ஆறு காவிரியுடன் கலக்கும் நொய்யல் கிராமம்வரை மூன்று முறை ஆற்றின் வழித்தடத்தில் பயணித்து, இந்த ஆய்வுக் கட்டுரைக்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

“நொய்யல் ஆற்றில் 10 இடங்களில் நீரின் கடினத்தன்மை (டி.டி.எஸ்), கார - அமிலத்தன்மை (பி.ஹச்.) முதலியவற்றை ஆய்வின் மூலம் கண்டறிந்தோம். மழைக் காலத்தில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் பாசனத்துக்குப் பயன்படுகிறதா; ஒரத்துப்பாளையம் அணை, சின்னமுத்தூர் தடுப்பணை, ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் ஆகிய மூன்று அணைகள் எதற்காகக் கட்டப்பட்டன என்பதை எல்லாம் ஆய்வின்போது தெரிந்துகொண்டோம்.

கடந்த 2005-ம் ஆண்டு முதல், நொய்யல் ஆற்றுநீர் எந்த அணையிலும் தேக்கப்படாமல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் கலந்துவருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் விநாடிக்கு 1,000 கன அடிக்கும் மேல் 20 முறை நொய்யலில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. இதை ஒரு நாள் என்ற கணக்கில் எடுத்தாலே கிட்டத்தட்ட 29,640 லட்சம் கன அடி நீர் சென்றுள்ளதை அறியலாம். அதேபோல 2011 நவம்பர் 7 அன்று நொய்யலில் உருவான வெள்ளத்தில், அன்று மட்டும் விநாடிக்கு 5,774 கன அடி நீர் சென்றுள்ளது. இதில், ஒரு சில மணித் துளிகளுக்குள் நொய்யல் ஆற்றில் உள்ள கழிவு நீர், சாய நீர் போன்றவை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதன் பின் வெள்ள நீர்தான் ஓடியது. அதை சின்னமுத்தூர் தடுப்பணையில் தடுத்து, அங்குள்ள ஊட்டுக்கால்வாய் மூலம் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்துக்குக் கொண்டு சென்றிருந்தால் கிட்டத்தட்ட 20,000 ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி கிடைத்திருக்கும். ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டதன் நோக்கமும் நிறைவேறி இருக்கும். ஆனால், இவை எதுவும் நடைபெறவில்லை” என்று இம்மாணவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

மேலும், நொய்யல் ஆற்றில் மழைக் காலத்தில் செல்லும் மழை நீரின் கடினத் தன்மை 179 ஆகவும், கார - அமிலத் தன்மை 7 ஆகவும் இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். நொய்யல் ஆற்றில் பல்வேறு பகுதிகளில் ஓடிய வெள்ள நீரை எடுத்துவந்து அதில் வெந்தயத்தைப் போட்டு முளைக்கச் செய்தனர்.

“மழை நீரில் வெந்தயத்தின் விளையும் தன்மையும் வளர்ச்சி விகிதமும் மிகவும் நன்றாக இருந்தன. ஆகையால், நொய்யலில் வரும் வெள்ள நீரை அணைகளில் தேக்கி விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். ஆனால், அதை யாரும் செய்யாததால், பாசனத்துக்குப் பயன்படாமல் மழை நீர் வீணாகிவருகிறது. நதிக்கரை ஓரங்களில் நாகரிகம் தோன்றியது. அதை ஒட்டி வேளாண்மையும் செழித்தது. இன்றைக்கு நொய்யல் நதியை நம்பி வாழும் வேளாண் குடும்பங்களில் மீண்டும் மகிழ்ச்சி மலர எங்கள் ஆய்வு பயன்பட வேண்டும்” என்கின்றனர் நதியை மீட்கப் புறப்பட்டிருக்கும் இந்த மாணவர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in