

புதுச்சேரி: தேசிய சட்டப் பல்கலைக்கழகமாக புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாறுகிறது. இதற்காக 76 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இணைந்து மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கியது. தனியார் ஹோட்டலில் தொடங்கிய இந்நிகழ்வில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேச மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். துவக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசியது: "புதுச்சேரி சட்டக் கல்லூரியை முதலில் பள்ளியில் தான் துவங்கினோம். சட்டக் கல்லூரியில் படிப்பது நல்ல வாய்ப்பு. தற்போது மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியவில்லை.
மருத்துவம், பொறியியலுக்கு பிறகு இறுதியாக இடம் கிடைக்காமல் சட்டக் கல்லூரிக்கு வரும் எண்ணம் இருக்கிறது. அது தவறானது. சட்டக் கல்லூரியில் படித்தாலே அனைத்தையும் அறிய முடியும். வாதாடி சாதிக்கும் நிலையில் இருக்கிறோம். சிறந்த வழக்கறிஞர்களுக்கு வாதாடும் திறமை அவசியம். அத்திறமையை வளர்க்க மாணவர்கள் முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறந்தவர்களாக வர முடியாது. அது சுலபமாக வந்து விடாது.
சட்டக் கல்லூரியில் அனைவரும் வந்து சேர மாட்டார்கள். நல்ல அறிவுத் திறன் உடையோர்தான் சேருவார்கள். இடம் கிடைக்காதோர் சேரும் இடமாக சட்டக் கல்லூரி உள்ளது. அந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும். தேசிய சட்டப் பல்கலைக்கழகமாக இக்கல்லூரி இருந்தால் சிறப்பாக இருக்கும். அதை ஆரம்பிக்க உடனடியாக 76 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது. விரைவில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் கொண்டு வர நடவடிக்கையை அரசு எடுக்கும்" என்று தெரிவித்தார்.
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் ஷகி பேசுகையில், "பொருளாதார வளர்ச்சியை முடிவு செய்வோர் நுகர்வோர்தான். அவர்கள் வாங்கும் பொருட்களில் இருந்து கிடைக்கும் வரி மூலம் தான் அரசால் நலத் திட்டங்கள் செயல்படுத்த முடிகிறது. அவர்களை பாதுகாப்பது வழக்கறிஞர் கடமை. தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியால் ஆன்லைனில் எங்கிருந்து வேண்டுமானாலும் பொருட்களை வாங்கும் போது அதில் வழக்கு வந்தால் அவ்வழக்கு சார்ந்த திறன் தேவை. குறிப்பாக இணைய பொருளாதாரம், ஆன்லைன் தொடர்பான அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியம். வழக்கறிஞரான பிறகு பணி கிடைப்பது கடினம். அத்துடன் தொழில் போட்டிகளை சமாளிக்க ஒரே வழி கடின உழைப்பு மட்டும் தான்" என்று பிரதாப் ஷகி குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் குடிமை பொருள் வழங்கல் அமைச்சர் சாய் சரவணக் குமார், தேசிய சட்டப்பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் விஜயகுமார், அரசு செயலர் பங்கஜ் குமார் ஷா உள்பட பலர் பங்கேற்றனர்.