

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் அவல நிலை உள்ளது. மேலும், கஜா புயலின்போது ஏற்பட்ட சேதங்கள் கூட இதுவரை சரி செய்யப்படவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரியில் திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு 1,200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 21 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், 16 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இதனால், மாணவ, மாணவிகளுக்கு வராண்டாவில் பாடம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும், 2018-ம் ஆண்டு கஜா புயலின்போது கல்லூரி கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கதவுகள் உடைந்து சேதமடைந்தன. ஆனால், இதுவரை அவை புதுப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக லேசான மழை பெய்தாலும் வகுப்பறைக்குள் மழைநீர் புகும் நிலை உள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக இருந்த இக்கல்லூரி, 2020-ம் ஆண்டு அரசு கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டது.
ஆனால், அதற்குரிய பேராசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், இதுவரை பெயர்ப் பலகை கூட மாற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், பொதுப்பணித் துறைக்கும் கல்லூரி தரப்பிலிருந்து தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டும், இதுவரை நடவடிக்கை இல்லை என கல்லூரி தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கல்லூரியில் பயிலும் மாணவர் மன்ற நிர்வாகி வீரபாண்டியன் கூறியதாவது: கல்லூரிக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். சிறிய அளவில் மழை பெய்தாலும் கல்லூரியை சுற்றி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
அவை மீண்டும் காய்ந்து சகஜ நிலைக்கு திரும்பவே 10 நாட்கள் ஆகின்றன. கல்லூரியை சுற்றிலும் சீமைக் கருவேல மர காடுகள் உள்ளன. அவற்றை முற்றிலும் அழிக்க வேண்டும். வகுப்பறைகள் மட்டுமின்றி ஆய்வகங்கள், நூலகம், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இக்கல்லூரியில் இல்லை. இவற்றையெல்லாம் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதுதொடர்பாக பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘‘இந்த அரசு கலைக் கல்லூரியானது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு முன்புதான் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் தற்போதுள்ள 2 கட்டிடங்களை இணைத்து கூடுதல் வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கஜா புயல் காரணமாக சேதமடைந்த பகுதிகளை புதுப்பிக்கவும், அணுகு சாலை அமைக்கவும் ரூ.9 லட்சம் மதிப்பிடப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் இந்தப் பணிகள் தொடங்கும் என்றனர்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து கூறியதாவது: இந்தக் கல்லூரியில் குடிநீர் வசதி இல்லை. இளங்கலை சமூகப்பணி என்ற படிப்பு தொடங்கி 3 ஆண்டுகளாகியும், அதற்கு உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது ஒரு பேட்ஜ் மாணவர்கள், பேராசிரியர்களே இல்லாமல் படிப்பையே முடித்துவிட்டனர். இந்த அவலங்களை சட்டப்பேரவையில் வலியுறுத்திப் பேசியுள்ளேன்.
பல்கலைக்கழக அதிகாரிகளையும் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தையும் தொடர்புகொண்டு வலியுறுத்தினேன். அதன்பின், மாவட்ட ஆட்சியர் கல்லூரியை ஆய்வு செய்தார். சமீபத்தில் வந்த பொதுக்கணக்கு குழுவையும் அழைத்து வந்து, கல்லூரியை பார்வையிட வைத்துள்ளோம். இத்தனை முயற்சிக்குப் பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.