

சென்னை: சந்திரயான்-3 தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சதீஷ் தவான் விண்வெளி மையஇயக்குநர் ராஜராஜன், மாணவர்கள் வாய்ப்புகளை எப்போதும் தவறவிடக்கூடாது என அறிவுறுத்தினார்.
நிலவை நோக்கி பயணித்து, அதன் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான்-3 செயல்பாடு குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்புவிருந்தினராக ஸ்ரீ ஹரிகோட்டாசதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநர் ஏ.ராஜராஜன் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: இன்றைய இளைஞர்கள் வாய்ப்புகளை கவருவதற்காக எந்நேரமும்தயாராக இருக்க வேண்டும். அவற்றை தவற விடக் கூடாது. வெற்றி, தோல்விகளுக்கு இடையேயான செயல்முறைகளை ரசிக்க பழகுங்கள். செயல்முறைதான் வாழ்க்கையை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.
இதைத்தான் சந்திரயானும் கற்று கொடுத்திருக்கிறது. நிலவில் சந்திரயானை தரையிறக்குவது என்பதுகடினமான பணியாகும். இதில்ஆயிரம் விஞ்ஞானிகள் முன்நின்றும், 80 ஆயிரம் பேர் பின்னணியிலும், 40 ஆயிரம் தொழிற்நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றியுள்ளனர்.
வருங்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது குறித்து,எதிர்கால இளைஞர்கள் சிந்திக்கவேண்டும். தேசத்தின் விருப்பத்தை பொறுத்தும், மக்களின் விருப்பத்தை பொறுத்தும்தான் சந்திரயான்-4 திட்டம் தொடங்கப்படுமா என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் துணைவேந்தர் வேல்ராஜ் பேசுகையில், “சந்திரயானின் வெற்றி இந்திய விண்வெளி தொழில்நுட்பத்துக்கு ஒரு மகுடமாக அமைந்திருக்கிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் மென்பொருள் சார்ந்த தொழில்நுட்பத்தில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே விண்வெளி தொழில்நுட்பத்திலும் மாணவர்களிடையே ஆர்வத்தைதூண்டும் வகையில் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார். இந்நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக முதல்வர் எல்.சுகந்தி,பதிவாளர் ஜெ.பிரகாஷ், முன்னாள் முதல்வர் ஜெபராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.