Published : 30 Jan 2018 12:56 PM
Last Updated : 30 Jan 2018 12:56 PM

மழலைகளுக்கான மண்ணின் ஆசிரியைகள்!

மா

ற்றுத் திறனாளியான அமுதசாந்தி தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளி பெண்களின் நலனுக்காகத்தான் தியாகம் பெண்கள் அறக்கட்டளையைத் தொடங்கினார். அதை அடுத்து, மதுரையைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கற்றல் இடைநிற்றல், படிப்பில் ஆர்வமில்லாமை போன்ற நிலை அதிகரிக்கவே கிராமப்புறங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கே படித்த பெண்களை அனுப்பி மாலைநேர வகுப்புகளை நடத்தத் தொடங்கினார்.

முதலில் இரண்டு மூன்று இடங்களில் தொடங்கப்பட்ட இத்தகைய டியூஷன் சென்டர்கள் இன்றைக்கு 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செயல்பட்டுவருகின்றன. பின்தங்கிய சூழலைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்விச் சேவையை அளித்துவருகிறது தியாகம் பெண்கள் அறக்கட்டளை. இதன் நிறுவனர் அமுதசாந்தி சந்த் விருது, சுவாமி விவேகானந்தா மற்றும் சகோதரி மார்கரெட் விருதையும் கடந்த ஆண்டு பெற்றிருக்கிறார்.

விடா முயற்சி தொடர் பயிற்சி

“கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக ‘தியாகம் நற்பண்பு கல்வி மையங்கள்’ என்ற டியூஷன் சென்டர்களை 2007-ல் தொடங்கினோம். முற்றிலும் இலவசமாகக் கற்றுக்கொடுப்பதால் நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து நன்கொடை பெற்று இங்கே கற்பிக்கும் பெண்களுக்கு சிறிய தொகை வழங்கினோம். அப்படித் தொடங்கப்பட்ட மாலை நேரக் கல்வி மையங்கள் தற்போது, மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சுற்றியுள்ள 23 கிராமங்கள், திருமங்கலம் தாலுக்காவில் 18 கிராமங்கள், மேலூரில் உலகநாதபுரம் என விரிவடைந்துவருகிறது. இக்கல்வி மையங்களின் மூலம் பத்தாம் வகுப்புவரை கல்வி பயிலும் 748 மாணவ, மாணவியர் பயன்பெற்றுவருகின்றனர்” என்கிறார் அமுதசாந்தி

தியாகம் நற்பண்பு கல்வி மையத்துக்கெனத் தனிப் பயிற்சி திட்டம் வகுக்கப்பட்டு வகுப்புகள் தினமும் மாலை 5.30 மணி முதல் 7.30 மணிவரை நடைபெறுகிறது. மையம் நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்தவரே கல்வி மையத்தின் ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்டுச் செயல்பட்டுவருகின்றனர். கல்வி மையக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான பெற்றோர் கூட்டம் மூன்று மாதத்துக்கு ஒரு முறையும் ஆசிரியர்களுக்கான கூட்டம் மாதம் ஒருமுறையும் கல்வி மையப் பார்வையிடல் தொடர்ந்தும் நடத்தப்பட்டுவருகின்றன.

மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு கல்வி மதிப்பீடு தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுப் பின்தங்கியுள்ள மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, உடனடியாக அவர்களுக்கு இன்னமும் கூடுதலாகத் தனிக் கவனம் கொடுக்கப்படுகிறது.

கல்வி மைய ஆசிரியர்களுக்குப் பாடத் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் சுய மேம்பாட்டுப் பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. ஆசிரியர்கள் தங்களது மாத அறிக்கை மூலமாக மாணவர்களின் கல்வி, பண்பு நிலை வளர்ச்சி, பயிற்றுவித்தல் அனுபவங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர். தேசத்தின் முக்கிய விழாக்களை ஒவ்வொரு கல்வி மையத்திலும் குழந்தைகள் கொண்டாடி மகிழ்கின்றனர். விழாக்களின்போது கல்வி மையக் குழந்தைகள் பள்ளிக் கல்வியில் மட்டுமின்றி, பல வகை கலைத் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

தொடரும் கல்விச் சேவை

“மாற்றுத்திறனாளிப் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பயிற்சி திட்டங்கள், அரசு நலத்திட்டங்கள், சுய தொழில், உரிமைகள் போன்ற வாழ்வியல் சார்ந்த தேவைகளுக்கு உரிய வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் தியாகம் தொடர்ந்து வழங்கிவருகிறது.

தியாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் மூலம் அடையாளம் காணப்பட்ட, தேவையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு, தனியார், தனிநபர், பிற சேவை அமைப்புகள் உதவியோடு அவர்தம் நல்வாழ்வுக்கான பணிகளைத் தியாகம் மேற்கொள்கிறது. குறிப்பாக மாலை நேரக் கல்வி மையங்கள், மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுப் பணிகளில் தியாகம் பெற்றிருக்கக்கூடிய அனுபவங்களைப் பிறருக்குப் பயன்படும் வகையில் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருக்கிறது” என்கிறார் அமுதசாந்தி.

தொடர்புக்கு: 9629625517, 0452 2602195

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x