இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள எல்.இ.டி. திரையில் காமராஜரின் வாழ்க்கை வரலாறு @ விருதுநகர்
விருதுநகர்: முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், விருதுநகரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் உள்ள காமராஜரின் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அதோடு, விருதுநகர் கச்சேரி சாலையில் காமராஜருக்கு அரசு சார்பில் மணி மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தமிழக அரசின் செய்தி- மக்கள் தொடர்புத்துறை நிர்வகித்து வருகிறது. விருதுநகரில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் அவரது வாழ்க்கைக் குறிப்புகள் வைக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது.
இதையடுத்து, காமராஜரின் முழு வாழ்க்கை வரலாற்றையும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் 6 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது.
இத்திரையில், காமராஜரின் அரிய புகைப்படங்கள், வாழ்க்கை குறிப்புகள் போன்றவை வீடியோ காட்சியாக தொகுக்கப்பட்டு திரையிடப்படுகின்றன.
இது குறித்து செய்தி- மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் கூறுகையில், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள அவரைப் பற்றிய வாழ்க்கை தொகுப்பு திரையிடப்படுகிறது. இதற்காக ரூ. 2 லட்சம் செலவில் ஒலி பெருக்கிகளுடன் கூடிய எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. மணி மண்டபத்தைப் பார்வையிட பொதுமக்கள் வரும்போது காமராஜரின் வாழ்க்கை வரலாறு எல்இடி திரையில் திரையிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
