Last Updated : 10 Oct, 2023 04:12 AM

 

Published : 10 Oct 2023 04:12 AM
Last Updated : 10 Oct 2023 04:12 AM

பள்ளி மாணவர்களுக்கு உளவியல் பாடம் அவசியம்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரியில் தமிழக அரசின் மனம் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை அண்மையில் தொடங்கி வைத்த ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா. உடன் மாவட்ட மனநல மருத்துவர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம்.

புதுக்கோட்டை: பள்ளி மாணவர்களுக்கு உளவியல் பாடத்தை அவசியமாக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும் அக்.10-ம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு, 'மனநலம் ஒரு உலகளாவிய மனித உரிமை' எனும் கருப்பொருளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாதுகாக்கும் செயல்களை முன்னெடுப்பதற்கு உலகளவில் ஒன்றுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதே இந்தக் கருப்பொருளின் நோக்கம் எனவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொண்டனர். இதேபோன்று, தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் மனவலிமை இல்லாமல் உயிரை மாய்த்துக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

படிப்பின் மீது ஒருவிதமான அச்சம், மதிப்பெண்களைப் பற்றி கவலைப்படுவது, குடும்ப சூழல், தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட பிரச்சினைகள் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றன. அவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க முயலும்போது விபரீதமான செயல்கள் நிகழ்ந்து விடுகின்றன. ஆசிரியர்களும் தண்டனைக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால், நாளுக்கு நாள் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையேயான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் மாணவர்களிடையே உளவியல் பிரச்சினை அதிகரித்து வருவதால், தொடக்கநிலை வகுப்பு முதல் கல்லூரி வரை அனைத்து வகுப்புகளுக்கும் உளவியல் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவர் ரெ.கார்த்திக் தெய்வ நாயகம் கூறியது: மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தவும், சவால்களை நேர்மறையாக எதிர்கொண்டு, மனஉறுதியுடன் வாழ வழிவகை செய்வதற்காகவும் “மனம்” எனும் திட்டத்தை மாணவர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம், மாணவ, மாணவிகளிடையே சமூக நீதி மற்றும் பாலின சமத்துவம் குறித்த முக்கியத்துவத்தை உணர்த்துதல், சக மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளை, அவர்களின் நிலையில் இருந்துஉணர்ந்து, மீண்டுவர உதவி செய்தல், மாணவர்கள், தங்கள் மன ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் வாழ்க்கை சூழல் உள்ளிட்ட காரணிகளைப் பற்றி கலந்துரையாட இத்திட்டம் மூலம் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பெரும்பாலான வளர்இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் சக வயதினரையே பெரும்பாலும் நம்பி, சகாக்களிடம் தங்களின் உளவியல் பிரச்சினைகளை பகிர்ந்து, உதவியை நாடுகிறார்கள் என்பதாக ஆய்வு கூறுகிறது. எனவே, மனநலம் தொடர்பான அறிவியல் ரீதியான கருத்துகளை மாணவர்களிடையே பரவலாக்குவதற்கு ‘சக கல்வியாளர் முறை’ மிகுந்த பயனளிக்கிறது.

அத்துடன், வளர்இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே ‘கூட்டு செயல்பாட்டு உணர்வை’ வலுப்படுத்தி நேர்மறையான நலவாழ்வு செயல்பாடுகளை வளர்த்தெடுப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதன் அடிப்படையில்தான் நிகழாண்டு கருப்பொருளும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் சுகாதார மேம்பாட்டுக்கான பொது சுகாதார கருவியாக சக கல்வியாளர் முறையை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

இதன் அடிப்படையில் மனம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு, மாவட்ட மனநல திட்ட கிளினிக், மாவட்ட மனநல ஆலோசனை மையம் மற்றும் மருத்துவக் கல்லூரி மனநல பிரிவில் ஆலோசனை அளிக்கப்படுவதுடன், 14416 அல்லது 104 எண்களில் மனநல ஆலோசனை பெறவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x