Published : 09 Oct 2023 05:14 AM
Last Updated : 09 Oct 2023 05:14 AM
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 50 அரசுப் பள்ளி மாணவர்கள் ரஷ்யாவுக்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள விண்வெளி வீரர்கள், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினர். மேலும், அவர்கள் ரஷ்ய கலாச்சார மற்றும் அறிவியல் மையங்களையும் பார்வையிட்டனர்.
இன்றைய இளைய தலைமுறையிடம் விண்வெளி அறிவியல் தொடர்பான விழிப்புணர்வை கொண்டு செல்வதற்கான பல்வேறுகட்ட செயல்பாடுகளை பிரம்மோஸ் மைய நிறுவனரும், மூத்த விஞ்ஞானியுமான ஏ.சிவதாணுப் பிள்ளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தை இணைய வழி வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்க முடிவானது. இதில் சிறந்து விளங்கும் மாணவர்களை ரஷ்யாவுக்கு விண்வெளி அறிவியல் கல்விப் பயணம் அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டது. அதன்படி அகத்தியம் அறக்கட்டளை மற்றும் யுர்சாகோ சொல்யூஷன்ஸ் உடன் இணைந்து இந்த பணிகளை விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை முன்னெடுத்தார்.
இந்த இணையவழி வகுப்புகள் கடந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி தொடங்கி 15 அமர்வுகளாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பாக செயல்பட்ட 29 மாவட்டங்களை சேர்ந்த 500 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு கட்ட இணையவழி பயிற்சிகள், தேர்வுகள் நடத்தப்பட்டு ரஷ்ய கல்விப் பயணத்துக்கு 11 மாவட்டங்களில் இருந்து 26 பள்ளிகளைச் சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதல்கட்டமாக 33 மாணவிகள் உட்பட 50 பேர் ரஷ்யாவுக்கு கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இதுகுறித்து பயணக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான டி.கோகுல் கூறியதாவது: சுமார் 2 ஆண்டுகள் பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பின்னர் ரஷ்ய விண்வெளி அறிவியல் கல்விப் பயணத்துக்காக மொத்தம் 75 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாயினர். அதில் முதல்கட்டமாக 50 மாணவர்கள், 10 ஆசிரியர்கள் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை 8 நாட்கள் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்படி செப்டம்பர் 30-ல் சென்னையில் இருந்து புறப்பட்ட மாணவர்கள் ஒருவாரத்துக்கும் மேலாக ரஷ்யா நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர்.
குறிப்பாக ரஷ்ய கலாச்சாரத்தை அறியும் விதமாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய எர்மிடேஜ் அருங்காட்சியகம், தி மியூசியம் ஆப் ஆர்மரி, பீட்டர் பால் கோட்டை, விக்டரி ஸ்கொயர் - த சேச் ஆப் லெனின் கார்ட், மாஸ்கோவில் லெனினின் பதப்படுத்தப்பட்ட உடல் உள்ள ரெட் ஸ்கொயர், க்ரிம்லின் மியூசியம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மேலும், அக்டோபர் 4-ம் தேதி முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் பயிற்சி பெற்ற ஸ்டார் சிட்டிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த மையத்தில் விண்வெளியில் வீரர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், பயிற்சிக் கூடங்கள் மற்றும் இதர ஆய்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களின் சந்தேகங்களுக்கு ரஷ்ய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.
அப்போது 1998-ம் ஆண்டு சோயூஷ் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்று திரும்பிய ரஷ்யா விண்வெளி வீரர் ஷாலிஜான் ஷாலிகோப் நமது மாணவர்களுடன் கலந்துரையாடி தனது பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், மாஸ்கோவில் உள்ள விண்வெளி கண்காட்சியையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.
ஒட்டுமொத்தத்தில் இந்த பயணத்தில் அறிவியலும், கலாச்சாரமும் ஒருசேர கிடைத்தது மாணவர்களுக்கு பெரும் அனுபவமாக அமைந்துவிட்டது. ஏனெனில், இவர்களில் பெரும்பாலானவர்கள் எளிய பின்னணியை சேர்ந்தவர்களாவர். முதல்முறையாக தற்போது தான் விமானத்தில் பயணிக்கின்றனர். இந்த கல்விப் பயணம் அவர்கள் விண்வெளி அறிவியலில் ஈடுபட சிறந்த உத்வேகத்தை வழங்கும். சுற்றுப் பயணம் செய்தவர்கள் தங்கள் பயண அனுபவங்களை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வர். இது அந்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். இந்த நிகழ்வுகள் எதிர்காலத்தில் பலர் அறிவியல் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்க வழிவகுக்கும். எஞ்சியுள்ள மாணவர்களையும் சேர்த்து அடுத்தாண்டு 75 பேர் ரஷ்யாவுக்கு சுற்றுப் பயணம் அழைத்து செல்லப்படுவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT