

சென்னை: வடசென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை நாளையுடன் (அக்.10) முடிவடைகிறது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வட சென்னை ஐடிஐயில் தற்போது நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆண்டு தொழிற் பிரிவுகளான சிவில் என்ஜினியரிங் உதவியாளர், சிவில் வரைவாளர், மெக்கானிக்கல் கட்டிடப்பட வரைவாளர் மற்றும் இயந்திர பட வரைவாளர், டர்னர், லிப்ட் மெக்கானிக் உள்ளிட்டவற்றுக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
அதேபோல ஓராண்டு தொழிற் பிரிவுகளான உள்துறை வடிவமைப்பு மற்றும் அலங்காரம், மெக்கானிக் ஆட்டோபாடி பெயின்டிங் மற்றும் 6 மாத தொழிற்பிரிவான டிரோன் விமானி பயிற்சி, தமிழக அரசு டாடா தொழிநுட்ப நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஓராண்டு மற்றும் 2 ஆண்டு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை நடக்கிறது.
இந்த இலவச தொழில் பிரிவுகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, கலை அறிவியல், பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சிகள் முடிவடைந்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி, தொழில் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.
மேலும் பயிற்சியின்போது மாதம் ரூ.750 உதவித்தொகை, இலவச பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவி, சீருடைகள், பஸ்பாஸ் வழங்கப்படும். பயிற்சியில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் நாள் நாளையுடன் (அக்.10) முடிவடைகிறது. தகுதியுள்ள மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு வடசென்னையில் உள்ள அரசினர் ஐடிஐயை நேரடியாக தொடர்பு கொண்டு சேர்ந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.