Last Updated : 19 Dec, 2017 10:44 AM

Published : 19 Dec 2017 10:44 AM
Last Updated : 19 Dec 2017 10:44 AM

பணி பிரம்மாக்கள்!

 

டித்த படிப்புக்கு உரிய வேலை கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பு சந்தையின் தேவைக்குக் கல்லூரியில் படித்த பாடம் ஈடுகொடுப்பதில்லை. கையில் பட்டம் வாங்கிய பிறகு கல்வி கற்பித்த நிறுவனத்துக்கும் நமக்கும் தொடர்பற்றுப் போய்விடுகிறது.

இவைதான் இந்தியாவில் தொழில்துறை படிப்புகள் முதற்கொண்டு வெவ்வேறு பாடப் பிரிவுகளைப் படித்த பெரும்பாலோரின் நிலை. ஆனால், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு நின்றுவிடுவதில்லை. தங்களுடைய சிறந்த மாணவர்களுக்கு அக்கல்வி நிறுவனங்களே வேலை அளிப்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய புதிய தொழில் முயற்சிகளுக்கும், தொழில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் வாய்ப்பு வசதிகளைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே செய்துதருகின்றன.

தங்களிடம் படித்த மாணவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளைக் கல்வி நிறுவனங்களே உருவாக்கித் தரும் நிலை இந்தியா போன்ற நாட்டில் சாத்தியமா? டெல்லி, ஹைதராபாத், பெங்களூருவில் மட்டுமின்றி சென்னையிலும் சாத்தியம் என நிரூபித்துள்ளது சென்னை ஐ.ஐ.டி. தங்களுடைய முன்னாள் மாணவர்களுக்கு மட்டுமல்லாது மற்ற கல்வி நிறுவனங்களில் படித்த திறன்வாய்ந்த இளைஞர்களுக்கும் பணிவாழ்க்கையை உருவாக்கித் தந்துகொண்டிருக்கிறது இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் சென்னை ஆராய்ச்சி பூங்கா.

அசத்தும் ஸ்டார்ட் அப்

அழகிய பூங்காபோலக் காட்சி அளிக்கும் ஐ.ஐ.டி.எம். ரிசர்ச் பார்க்கில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தன்னம்பிக்கை மிளிர வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார்கள். டைட்டன், செயின்ட்கோபைன் உள்படப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சிக் கூடங்களில் சிலர் இளம் ஆராய்ச்சியாளர்களாகப் பணிபுரிகின்றனர். அதைவிடவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் தங்களுடைய சொந்த ஸ்டார்ட் அப்புகளை நிறுவியுள்ள இளம் சாதனையாளர்கள் இங்கு பலர் உள்ளனர். ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்கள் சிறிய குழுக்களாகப் பிரிந்து தொடங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல இங்கு செயல்பட்டுவருகின்றன.

இவர்கள் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைபோன்ற வழக்கமான வேலைகளைச் செய்யவில்லை. சூரியஒளி மின்சாரம் மூலமாக வாகனங்களை இயக்கும் ஆராய்ச்சி நிறுவனமான ‘Pibeam Labs’, வாகன நிறுத்தத்தைத் தானியங்கி அமைப்புக்குள் கொண்டுவரும் திட்டத்தை வடிவமைத்துவரும் ‘Wiitronics’ நிறுவனம், நீர் மேலாண்மையில் ஈடுபடும் ‘Green Environment’ என வித்தியாசமான பல நிறுவனங்கள் இங்குச் செயல்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள், அடுத்த தலைமுறையினருக்கான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் எனப் படைப்பாற்றல் மிக்க வேலைகள் இங்குச் சத்தமில்லாமல் நடைபெற்றுவருகின்றன.

அவற்றில் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்கும் மாற்றுக் கல்வி திட்டத்தை வடிவமைக்கும் ‘ஸ்கில் ஏஞ்சல்ஸ்’, பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ், எம்பெடட் சிஸ்டம், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், கம்ப்யூட்டர் விஷன் அண்ட் மிஷின் லேர்னிங் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் ‘லேமா லாப்ஸ்’ போன்றவை கவனத்தை ஈர்க்கின்றன.

படைப்பாற்றல்மிக்க கற்றல் முறை

ரிசர்ச் பார்க்கின் முதல் மாடியில் இருந்த ஒரு அறையில் ‘ஸ்கில் ஏஞ்சல்ஸ்’ இயங்கிக்கொண்டிருக்கிறது. ஏழு, எட்டு இளைஞர்கள் தங்களுடைய கணினியில் ஏதோ வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அறையின் நடுவில் மூன்றடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் சிரித்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தது ‘எக்ஸ்புளோரா’ (‘Explora’) என்னும் அவர்கள் வடிவமைத்த ரோபோட்.

‘இவர்கள் யாரும் வேலை பார்க்கிற மாதிரித் தெரியலையே!’ என்கிற நம்முடைய மனவோட்டத்தைக் கணித்த அதன் நிறுவனர் சரவணன் சுந்தரமூர்த்தி, “இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை கணினி, தொலைக்காட்சி, மொபைல்ஃபோன் என ஏதோ ஒரு திரையைத்தான் அதிகப்படியான நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் வெறும் பார்வையாளர்களாக இருக்கிறார்களே தவிரப் பங்கேற்பாளராக இருப்பதில்லை.

இதை மாற்ற நாங்கள் ‘கேம் பேஸ்டு லேர்னிங்க்’ எனப்படும் விளையாட்டின் மூலமாகக் கற்பிக்கும்முறையில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறோம். தொடக்கநிலை முதல் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்வரை அவர்களுடைய நுண்ணறிவை கூர்மைப்படுத்த இது கைகொடுக்கும். அதேநேரத்தில் கற்றலைச் சுமையாக உணராமல் சுவாரசியமாக மாற்றும் முயற்சி இது.

வழக்கமான பாடங்கள் தவிர்த்துப் போட்டித் தேர்வுகளில் சோதிக்கப்படுவது பகுப்பாய்வுத் திறன். நினைவாற்றல், காட்சி நுண்ணறிவு, கணிதப் புதிர்களுக்குத் தீர்வு காணுதல், கவனக்குவிப்பு, மொழி ஆற்றல் போன்றவற்றை வளர்க்கும் விளையாட்டுகளை இங்கு வடிவமைத்துவருகிறோம். பன்னாட்டு நிறுவனங்களும் பணியாளர்களுக்கான தேர்வில் எங்களுடைய ‘கேம் பேஸ்ட் லேர்னிங்க்’-ஐ தற்போது பயன்படுத்துகிறார்கள். ஆக, பொழுதுபோக்கு என்கிற நிலையிலிருந்து படைப்பாற்றல்மிக்க கற்றல் முறை என்கிற புதிய அர்த்தத்தை நாங்கள் விளையாட்டுகளுக்குத் தந்துகொண்டிருக்கிறோம்” என்றார் உற்சாகமாக.

இயந்திரம் டூ எந்திரம்

அங்கிருந்து வெளியேறிக் கீழ்த்தளத்துக்கு வந்தால் ‘கெயிஜன் ரோபோட்டிக்ஸ் புரோகிராம்’ ஆங்காங்கே பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உத்வேகத்தோடு குட்டி ரோபோட்களை இயக்கியபடி வகுப்பில் விரிவுரையாற்றிக்கொண்டிருந்த இளைஞர்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கல்லூரி மாணவர்கள்கூட அல்ல என்பது பின்பு தெரியவந்தது. “குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நான் தற்போது சிங்கப்பூரில் ஃபிசியோதெரபிஸ்டாக இருக்கிறேன். கூடிய சீக்கிரம் மருத்துவத் தொழிலுக்கும் ரோபோட் தொழில்நுட்பம் அத்தியாவசியமாகிவிடும் என்பதால் இந்தப் பயிலரங்கம் குறித்துக் கேள்விப்பட்டு வந்தேன்” என்றார் தாரா. கோயம்புத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிந்துவரும் அனிதா, “நான் தயாரிப்பு பிரிவில் வேலை பார்க்கிறேன். இன்று இயந்திர வடிவில் இருக்கும் பல பொருள்கள் விரைவில் எந்திர வடிவமாக மாறவிருப்பதால் இங்கு அடுத்தகட்டத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்” என்றார்.

கண்டுபிடிப்புகளுக்கான இடம்

தனிக் குழுக்களாகப் பிரித்து இவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் வகுப்பு எடுத்த இளைஞர்களில் ஒருவரான பார்த்திபன், “நான் சாதாரண குடும்பச்சூழலில் இருந்து வந்தவன். என்னுடைய பெற்றோர் செங்கல் சூளையில் வேலை பார்த்துத்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. எம்பெடட் டெக்னாலஜி வரைக்கும் என்னைப் படிக்கவைத்தார்கள். ஆனால், படித்துமுடித்த பிறகு ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்க விருப்பமில்லை. இன்று பொறியியல் படித்த பல இளைஞர்கள் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தகட்டத் தொழில்நுட்பக் கல்வியைக் கற்பித்து வழிநடத்தும் ஐ.ஐ.டி.யின் லேமா லேப்ஸில் 2012-ல் இணைந்தேன். இது புதிய படைப்பாற்றலுக்கான, கண்டுபிடிப்புகளுக்கான இடம்.

இங்கு வாராவாரம் 40 மணி நேரத்துக்கு ரோபோட்டிக்ஸ் உட்படப் புதிய தலைமுறை தொழில்நுட்பங்களை செயல்முறை விளக்கத்தோடு கற்பிக்கிறோம். அதில் சேரும் மாணவர்களை 4 மாதங்களுக்குப் புதிய புராஜெக்ட்டுகள் மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயார்படுத்துவோம். 10 ரோபோட்களை ஒவ்வொருவரும் தானாக உருவாக்கும் ஆற்றலை வழங்குவோம். இப்படி எங்களிடம் பயிற்சி பெற்ற பல இளைஞர்கள் ஐ.ஐ.டி. ரிசர்ச் பார்க்கில் உள்ள புதிய நிறுவனங்களில்கூடப் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இளைஞர்களுக்கு மட்டுமின்றிப் பள்ளி எட்டாம் வகுப்பு அதற்கு மேற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கிறோம். டிசம்பர் 26 முதல் பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம் தொடங்கவிருக்கிறது. பள்ளிக்கூடங்கள் மூலமாக மட்டுமல்லாமல் நேரடியாகவும் lemalabs.com/register என்கிற இணையதளத்தில் பதிந்து இங்கு சேர்ந்து எதிர்காலத்தை எதிர்கொள்ள உங்களைத் தயார்படுத்திக்கொள்ளலாம்” என்கிறார்.

ஏதோ ஒரு பணியில் சேர நம்மைத் தயார்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் புதிய பணிகளை உருவாக்கும் இளைஞர்களுக்கு தாய்மடியாகத் திகழும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள்தான் இன்றைய அவசியத் தேவை.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x