அக்.30 முதல் நவ.5-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைபிடிக்க, பல்கலைக்கழக மானியக் குழுமம் (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, யுஜிசியின் செயலர் மணீஸ் ஆர்.ஜோஷி அனைத்துபல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்.31-ம் தேதியையொட்டி, அந்த வாரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டில் ‘ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள்: தேசத்துக்காக அர்ப்பணியுங்கள்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், வரும் அக்.30-ம் தேதி முதல் நவ.5-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது.

ஊழல் தொடர்பான நடைமுறைகளையும், அவற்றை எப்படி முறையிட வேண்டும் என்பது குறித்தும் மக்களிடம் கற்பித்தலை உருவாக்க இந்த விழிப்புணர்வு வாரம் உபயோகமாக இருக்கும்.அந்தவகையில், உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாணவர்களை ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

அதேபோல ஊழல் தடுப்பு தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், பட்டிமன்றம், விநாடி-வினா போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ் அப் செயலி போன்றவற்றின் வாயிலாகவும் விழிப்புணர்வு செய்திகளை சக மாணவர்களிடையே பரப்பவும் அறிவுறுத்தலாம்.

இந்த செயல்பாடுகளின் நிலவரத்தை அறிக்கையாக்கி மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு கல்வி நிறுவனங்கள் அனுப்ப வேண்டும். இந்த தகவல்கள் யுஜிசியின் பல்கலைக்கழக செயல்பாட்டு கண்காணிப்பு இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in