

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட பூலுவபட்டி அரசுப் பள்ளியை ஒட்டி, அங்கன்வாடி குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது கட்டிடத்தின் மேற்கூரை சிதிலமடைந்து, இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. குறிப்பாக, மழைக் காலங்களில் குழந்தைகளை அச்சத்துடன் அனுப்பும் சூழ்நிலையில் பெற்றோர் உள்ளனர்.
ஏற்கெனவே, கடந்த காலங்களில் மழை பெய்தபோது மேற்கூரை சேதமடைந்தது. தொடர்ந்து அந்த சேதத்தை சரி செய்யாமல்விட்டதால், தற்போது குழந்தைகள் பகலில் தங்கி பயிலும் அறையின் மேற்கூரை இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது. அதேபோல, அங்கன்வாடி நுழைவுவாயில் மேற்கூரையும் சிதிலமடைந்துள்ளது.
இதுதொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் கூறும்போது, “இங்கு விக்னேஷ்வரா நகர் மற்றும் பூலுவபட்டி பகுதியை சேர்ந்த குழந்தைகள் படிக்கின்றனர். கட்டிடம் சீரமைக்கப்படாததால், குழந்தைகளை அச்சத்துடன் அனுப்பும் நிலைதான்உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அதன்பின், இந்த அங்கன்வாடியை பார்க்கும்போதெல்லாம் அச்சத்துடன் இருக்க வேண்டியுள்ளது.
அதேபோல, அருகில் மாநகராட்சி நிர்வாகம், கால்நடை மருத்துவமனையை ஒட்டிய பகுதியில் குப்பை கொட்டுவதால், இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஈக்களின் தொந்தரவால், அங்கன்வாடியில் குழந்தைகள் சுகாதாரமான உணவு உண்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கைகள் வைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதேபோல, வளாகத்தில் முட்செடிகளை குவித்து வைத்திருப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இருக்குமோ என்ற அச்சமும் எழுகிறது. அங்கன்வாடி வளாகத்தை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பு. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.