

இந்த ஆண்டு சர்வதேச அளவில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த ஒரு கழுகுப் பார்வை…
பெருங்கொள்ளை ஆவணங்கள் அம்பலம்
2016-ல் பனாமா ஆவணங்கள் என்றால் 2017-ல் பாரடைஸ் பேப்பர்ஸ் சர்வதேச அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரும் செல்வந்தர்கள் வரிச்சலுகையைப் பயன்படுத்தும் ரகசியங்களைப் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் சர்வதேசக் கூட்டமைப்பு (ICIJ) நவம்பர் 5 அன்று ‘சுடூஸ்ச்சே ஜெய்டங்’ என்ற ஜெர்மன் நாளிதழில் அம்பலப்படுத்தியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட உலக நாடுகளின் 96 பத்திரிகைகள் இணைந்து நடத்திய இந்த விசாரணையில் கடன் ஒப்பந்தங்கள், நிதி அறிக்கைகள், மின்னஞ்சல் உட்பட 70 லட்சம் ஆவணங்கள் சிக்கின. விஜய் மால்யா, நடிகர் சஞ்சய் தத், மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பா.ஜ.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் ரவீந்தர் கிஷோர் சின்ஹா உட்பட 714 இந்தியர்களின் பல்வேறு ஆவணங்கள் இதில் அம்பலமாயின.
மனித உரிமைக்குக் கையெழுத்திட மறுப்பு!
மியான்மர் ரக்ஹைன் மாகாணத்தைச் சேர்ந்த ரோஹிங்க்யா சிறுபான்மை இஸ்லாமியர்கள் இனப்படுகொலை செய்யப்படும் சம்பவம் உலகை உலுக்கிவருகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவில் செப்டம்பர் 7 அன்று ‘நிலையான வளர்ச்சி’ என்ற தலையில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பாலி பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்தது. காரணம் இனம், மதம் கடந்து ரக்ஹைன் மாகாணத்தைச் சேர்ந்த எல்லாத் தரப்பு மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், அவர்களுடைய வாழ்வாதாரம் வன்முறை இன்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்றது பாலி பிரகடனம். ஆனால், நிலையான வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் கூட்டத்தில் மியான்மரில் நடந்தேறும் வன்முறைக்கு முக்கியத்துவம் தருவது அநாவசியம் என்றார் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.
இரண்டாவதுவெப்ப ஆண்டு
இதுவரை பதிவான வெப்பமான மூன்று ஆண்டுகளில் 2017-ம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக உலக வானிலை மையம் நவம்பர் 6 அன்று ஜெர்மனியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய கருத்தரங்கில் அறிவித்தது. இந்தியாவின் 2017-ம் ஆண்டுக்கான பருவமழைக் காலமும் சராசரியைவிட 5 சதவீதம் குறைந்திருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ‘எல் நினோ’ விளைவால், 2016-ம் ஆண்டுதான் அதிவெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருக்கிறது. தொழிற்புரட்சிக்கு முன்னதாகப் பதிவான உலகின் சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் 1.1 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பம் 2017-ம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பருக்குள்ளாகப் பதிவாகி இருக்கிறது.
ஆக்ஸ்போர்டு அகராதியில் அப்பா!
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் 2017 செப்டம்பர் மாதப் பதிப்பில் ‘அப்பா’, ‘அண்ணா’ உள்ளிட்ட தமிழ்ச் சொற்கள், ‘சூரிய நமஸ்கார்’, ‘மாதா’, ‘ஜெய்’ போன்ற இந்திச் சொற்கள் ஆகியவை இடம்பிடித்தன. மொத்தம் 1,000 புதிய சொற்களைச் சேர்த்தது ஆக்ஸ்போர்டு அகராதி. அவற்றில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளின் 70 சொற்களும் சேர்க்கப்பட்டன. அதிலும் வடை, குலாப் ஜாமுன், கீமா, மிர்ச் மசாலா போன்ற இந்திய உணவுப் பண்டங்களின் பெயர்களும் இடம்பெற்றன.
அயர்லாந்தின் பிரதமரான இந்தியர்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான மருத்துவர் லியோ வரத்கார் அயர்லாந்து நாட்டின் பிரதமராக ஜூன் 15 அன்று பதவியேற்றார். 24 வயதில் அயர்லாந்தில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘தெயில்’ என்றழைக்கப்படும் அயர்லாந்து நாடாளுமன்றத்துக்குள் 2007-ல் அடியெடுத்துவைத்தார் லியோ. 2011-ல் அந்நாட்டின் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை, சுகாதாரத்துறை அமைச்சர் ஆனார். தற்போது அயர்லாந்தில் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரியவராகத் திகழ்கிறார்.
அமெரிக்கக் கனவு கலைகிறதா?
அமெரிக்க அதிபர் டிரம்பின் விசா கெடுபிடியாலும் அமெரிக்காவில் நடந்தேறும் நிறவெறிப் பிரச்சினைகளாலும் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள 250 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், முன்பைக் காட்டிலும் அமெரிக்காவில் இளநிலைப் படிப்புகளுக்காக விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 26 சதவீதம், இதர கல்லூரிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் படிக்க முன்வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் படித்துவந்த வெளிநாட்டு மாணவர்களில் 47 சதவீதத்தினர் சீனர்கள் மற்றும் இந்தியர்களாக இருந்தமையால் மார்ச் மாதம் வெளியான ‘ஓபன் டோர்ஸ் 2016’ என்ற ஆய்வு முடிவு அதிர்ச்சி அளித்தது.
உலகின் கடைசி டைனோசர்!
வட மொரக்கோவில் உள்ள பாஸ்பேட் சுரங்கத்தில் ஆப்பிரிக்காவில் வசித்த கடைசி டைனோசரின் புதை படிவம் மே 6 அன்று கண்டெடுக்கப்பட்டது. ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குறுங்கோள் பூமியைத் தாக்கியதில் அழிந்துபோன செனானிசாரஸ் பார்பரிகஸ் (Chenanisaurus barbaricus) இனத்தைச் சேர்ந்த டைனோசர் இது. மொரக்கோ நாட்டில் உள்ள பா பல்கலைக்கழகத்தின் பரிணாம வளர்ச்சி ஆய்வுக்கூடமான மில்நர் மையத்தில் இந்தப் புதை படிவ ஆராய்ச்சி நடைபெற்றது. கிரிடேஷியஸ் காலகட்டத்தில் கோண்ட்வானா துணைக்கண்டம் தனியாகப் பிரிந்துபோனபோது செனானிசாரஸ் பார்பரிகஸ் வகை டைனோசர் உருவானதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 101 கோடீஸ்வரர்கள்!
2017 மார்ச் 20 அன்று ‘ஃபோர்ப்ஸ்’ இதழ் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது. உலகில் மொத்தம் 2 ஆயிரத்து 43 கோடீஸ்வரர்கள் இருப்பதாக இது தெரிவித்தது. 86 பில்லியன் அமெரிக்க டாலருடன் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத் தலைவர் வாரன் பஃபே உள்ளார். இதில் 101 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்களில் முகேஷ் அம்பானி 23.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
45-வது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றார். டிரம்ப் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு, மெக்சிகோ - அமெரிக்கா இடையில் பெருஞ்சுவர், இஸ்லாமிய மக்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்றுதல் போன்றவற்றை முன்னிறுத்தி வாக்குகளைச் சேகரித்தார். நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் 2016 நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டனை வென்றார்.
மலாலாவுக்கு ஐ.நா.விருது!
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு ‘ஐ.நா. அமைதித் தூதர்’ பட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 10 அன்று வழங்கியது. கலை, இலக்கியம், விளையாட்டு போன்றவை மூலமாக ஐ.நா.வின் கொள்கைகளைப் பரப்புவோருக்கு இப்பட்டத்தை ஐ.நா. சபை வழங்குகிறது. ஐ.நா.வின் அமைதித் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் மிக இளையவர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது. பட்டத்தைப் பெற்றுக்கொண்டவர், “பெண்களின் சிறகுகளைக் கட்டிப்போடாமல் அவர்களை ஆண்கள் சுதந்திரமாகப் பறக்கவிட வேண்டும்” என்றார்.
உலக அளவில் எழுத்தறிவை ஏற்படுத்த தாய்மொழியில் கல்வி கற்பித்தல், கிராமப்புறங்களில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் தீட்டுதல் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு ஆகஸ்ட் 30 அன்று யுனெஸ்கோ 2017 சர்வதேச எழுத்தறிவு விருது வழங்கியது.
மூன்றாம் பாலினத்தவர்களுக்குப் பாலினம் கடந்த கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று கனடா நாட்டு அரசு ஆகஸ்ட் 24 அன்று அறிவித்தது. கடவுச்சீட்டு, அடையாள அட்டை உள்ளிட்ட அத்தனை ஆவணங்களிலும் பாலினம் என்ற பகுதியில் ‘X’ என்று மூன்றாம் பாலினத்தவர்கள் பதிவிடலாம் என்றது கனடா அரசு.
உலகின் முதல் அவசர சேவை எண்ணை அறிமுகப்படுத்திய நாடு பிரிட்டன். காவல் நிலையம், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தனை அவசர உதவிக்கும் பிரிட்டன் அழைப்பு எண்ணான ‘999’-க்கு 2017 ஜூலை 2 அன்று வயது 80.
‘வாசியுங்கள் – நீங்கள் வசிப்பது ஷார்ஜாவில்!’ என்பதை மந்திர வாசகமாகக் கொண்ட ஐக்கிய அரபு நாடுகளின் நகரமான ஷார்ஜாவை ‘உலகப் புத்தகத் தலைநகரம்’ என்று யுனெஸ்கோ ஜூன் 28 அன்று அறிவித்தது.
வேலையில்லா பின்லாந்து குடிமக்களுக்கு மாதந்தோறும் 560 யூரோ சம்பளமாக ஜனவரி 5 முதல் அளிக்கத் தொடங்கியது பின்லாந்து. 2000 வேலையில்லா மக்களைத் தேர்ந்தெடுத்து இரண்டாண்டு சோதனைத் திட்டமாக இதை முன்னெடுத்துள்ளது பின்லாந்து.