தருமபுரியில் முதுநிலை பட்ட மாணவியருக்கு விடுதி வசதி இல்லாததால் தடைபடும் கல்வி: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

தருமபுரியில் முதுநிலை பட்ட மாணவியருக்கு விடுதி வசதி இல்லாததால் தடைபடும் கல்வி: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரியில் அரசு கலைக் கல்லூரி மாணவியருக்கான விடுதியில் தங்குமிடம் கிடைக்காமல் முதுநிலை பட்ட மாணவியரின் கல்வி தடைபட்டு வருகிறது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு, 2 ‘ஷிப்ட்’ அடிப்படையில் மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்தும், தருமபுரி மாவட்டத்தின் தொலை தூர கிராமங்களில் இருந்தும் இந்த கல்லூரியில் பயிலும் மாணவியர் தங்கி பயிலும் வகையில் அரசு சார்பில் கல்லூரிக்கு அருகிலேயே விடுதிகள் செயல்படுகின்றன.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் விடுதியில், இளநிலை பட்ட வகுப்பு பயிலும் 150 மாணவியர் தங்கி படிக்கின்றனர். இதன் அருகிலேயே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் விடுதியில் 100 இளநிலை பட்ட வகுப்பு மாணவியர் தங்கியுள் ளனர்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.எஸ்ஸி. கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட முதுநிலை பட்ட வகுப்புகள் பல ஆண்டுகளாக உள்ளன. ஆனால், முதுநிலை பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவியர் இவ்விரு விடுதிகளிலும் தங்கி படிக்க உரிய துறைகள் மூலம் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தெரிகிறது.

முறையான அனுமதி கிடைக்கும் போது தான் அதற்கேற்ப விடுதியில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி மாணவியருக்கு சேர்க்கை வழங்க முடியும். இந்த வசதிகள் இல்லாததால் முதுநிலை பட்ட வகுப்பு மாணவியர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து, சில மாணவியரின் பெற்றோர் கூறும்போது, ‘முதுநிலைப் பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவியருக்கு தங்கும் விடுதி வசதி இல்லாததால் பல பெண்களின் முதுநிலை கல்விக் கனவு பாழாகி வருகிறது. கடந்த கல்வியாண்டில் முதுநிலை பட்ட வகுப்பில் சேர்க்கை பெற்ற வெளியூர் மாணவியர் 4 பேர் விடுதி வசதி இல்லாததால் தங்களின் படிப்பையே கைவிட்டு விட்டனர்.

எனவே, உரிய ஆய்வுகள் மேற்கொண்டு இரு விடுதிகளிலும் தலா 50 முதுநிலை பட்ட மாணவியர் தங்கி படிக்கும் வகையில் வசதிகள் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in